சென்னை: தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் தாக்கல் செய்திருந்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக விதிகளுக்குப் புறம்பாக அரசின் முன்அனுமதி பெறாமல் பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் என்ற பெயரில் தனி அமைப்பை அரசு நிதியில் தொடங்கியுள்ளதாகக்கூறி துணைவேந்தர் ஆர்.ஜெகந்நாதன் உள்ளிட்டோருக்கு எதிராக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் இளங்கோவன் என்பவர் போலீஸில் புகார் அளி்த்திருந்தார்.
அதில், இந்த அமைப்பு குறித்து கேள்வி கேட்ட தன்னை சாதிப் பெயரைக் குறிப்பிட்டு திட்டியதாக புகாரில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த புகாரின்பேரில் துணைவேந்தர் ஜெகந்நாதன், பதிவாளர் தங்கவேல் மற்றும் ராம்கணேஷ் உள்ளிட்டோருக்கு எதிராக சேலம் கருப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி துணைவேந்தர் ஜெகந்நாதன், பதிவாளர் தங்கவேல், ராம்கணேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில், “புதிதாக தொடங்கப்பட்ட அந்த அமைப்பின் மூலமாக எந்த பரிவர்த்தனையும், முறைகேடுகளும் நடைபெறவில்லை. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்,” என கோரியிருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நடந்தது. அப்போது போலீஸார் தரப்பில், “இந்த வழக்கில் துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது,” என வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகந்நாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல் ஆகியோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து, அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.