மதுரை: வங்கிகளில் நகைக் கடன்களை வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பிக்கும் முறையை ரத்து செய்யும் சுற்றறிக்கையை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த பிச்சைராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: வங்கி நகைக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் கடந்த 2024 செப்.30-ல் சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த சுற்றறிக்கையில், ஒரே பான் எண்ணை பயன்படுத்தி பல நகைக் கடன்கள் பெறுவது, நகைக் கடன்களை குறிப்பிட்ட தொகை செலுத்தி திரும்ப வைப்பது, புதுப்பிப்பது தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்கள் இடம் பெற்றுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் மிகவும் தெளிவற்றவையாகவும், பொது மக்களின் சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமலும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
வங்கிகளில் இதுவரை நகைக் கடன்களை ஆண்டு முடிவில் வட்டியை மட்டும் திரும்ப செலுத்தி கடனை புதுப்பிக்கலாம். அப்படி செய்யும்போது அசல் தொகையை முழுமையாக செலுத்த வேண்டியதில்லை. புதிய சுற்றறிக்கையில், வட்டியுடன் அசல் தொகையை முழுமையாக செலுத்தி நகைகளை மீட்கவும், மறுநாள் மறு அடமானம் வைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் நகை அடமான கடன் பெற்றவர்கள் ஆண்டு முடிவில் முழுத்தொகையையும் செலுத்தி நகைகளை திருப்ப வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. முழுத் தொகையை செலுத்த முடியாமல் போனால் நகைகளை இழக்க வேண்டியது ஏற்படும்.
ஏழை மக்கள் அவசர பணத் தேவைக்கு நகைக் கடனை நம்பியே உள்ளனர். முன்பு ஒரு நபர் எத்தனை முறை வேண்டுமானாலும் நகைக் கடன்களை பெறலாம். இந்த சுற்றறிக்கை படி, ஒரு நபர் 5 முறை மட்டுமே நகைக் கடன் பெற இயலும். இந்த பாகுபாடு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. சாதாரண ஏழை மக்கள் முதல் சிறு வணிகர்கள், பெரு வணிகர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நகைக் கடன் பெரும் உதவியாக உள்ளது.
இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ள சுற்றறிக்கை சட்டவிரோதமானது. எனவே தங்க நகை கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை செல்லாது என உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.