புதுடெல்லி: உணவு விநியோகம், ஐஸ்க்ரீம் தயாரிப்பு போன்றவைகளில் இருந்து செமிகன்டெக்டர், ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகள் பக்கமும் கவனம் செலுத்துமாறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை வழங்கினார். மேலும் ஸ்டார்ட் அப் துறையில் அதிக இந்திய முதலீட்டாளர்களின் தேவையையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்டார்ட் அப் மகா கும்ப மேளாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், “இந்திய ஸ்டார்ட் அப் துறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாம் உணவு விநியோக செயலிகளில் மட்டும் கவனம் செலுத்தி வேலையில்லாத இளைஞர்களை குறைந்த கூலிகளாக மாற்றியுள்ளோம். இதனால், பணக்கார்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராமலேயே உணவு கிடைக்கிறது.
இளைஞர்களை வெறும் டெலிவரி நபர்களாக மட்டும் உருவாக்கி நாம் திருப்திப்பட்டுக் கொள்ளப் போகிறோமா? இதுதான் இந்தியாவின் விதியா? இது ஸ்டார்ட் அப் இல்லை. இதற்கு பெயர் தொழில்முனைவு.
மற்ற பக்கங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் ரோபாட்டிக்ஸ், 3 டி உருவாக்கம் மற்றும் அடுத்த தலைமுறை தொழிற்சாலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். நாம் இன்னும் சிப்ஸ், ஐஸ்க்ரீம்களையே தயாரித்துக் கொண்டிருக்கப் போகிறோமா?
இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதிர்காலத்துக்கு நாட்டை முன்னேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
தங்களின் ஸ்டார்ட் அப் பயணத்தில் சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு அரசு தோள் கொடுத்து ஆதரவு அளிக்கிறது. விடாமுயற்சியுடன் மீண்டும் முயற்சி செய்வதற்கு ஊக்குவிக்கிறது.
அதேநேரத்தில் நாம் உள்நாட்டு மூலதனத்தை அதிகரிக்க வேண்டும், வெளிநாட்டு மூலனத்தை சார்ந்திருப்பதை குறைத்து, உள்நாட்டு மூலதனத்துக்கான அடித்தளத்தை வலுப்படுத்துவது நீண்ட கால பொருளாதார நிலைத்தன்மைக்கு வழி வகுக்கும்.
இந்தியாவின் மூலதனத்துக்கான அடித்தளத்தை வலுப்படுத்தவும், தன்னிறைவை உறுதிப்படுத்தவும் அதிக அளவில் உள்நாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும்.” என்றார்.