Site icon Metro People

பின்வாசல் வழியாக அரசுப் பணியில் சேருபவர்களை எந்தச் சூழலிலும் பணி வரன்முறை செய்யக் கூடாது: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பின்வாசல் வழியாக அரசுப் பணியில் சேருபவர்களை, எந்தச் சூழலிலும் பணி வரன்முறை செய்யக் கூடாது என்று தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கடந்த 2007-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அந்த அரசாணையின்படி, நீண்டகாலமாக தற்காலிக ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தங்களை, பணி நிரந்தரம் செய்யக் கோரி பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களின் மூலமாக நியமிக்கப்பட்ட கோவிந்தராசு, திவ்யா உள்ளிட்ட 4 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

தேர்வு நடைமுறைகள்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‘‘மனுதாரர்கள் தகுதிபெற்ற கல்வித் துறை அதிகாரிகளால் நியமிக்கப்படாமல், பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களின் மூலமாக, உரிய தேர்வு நடைமுறைகளைப் பின்பற்றாமல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்காலிக ஆசிரியர்களாக நீண்டகாலம் பணியாற்றியுள்ளோம் என்பதற்காக, பணி நிரந்தரம்செய்யக் கோர முடியாது. முறையாக நியமிக்கப்படாதவர்களுக்கு பணி நியமன சலுகை வழங்கினால், உரிய தகுதியுடன் அரசுவேலைக்காகக் காத்திருப்பவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்.

அரசுப் பணிகளுக்கான அனைத்து நியமனங்களும் உரிய தேர்வு விதிகளைப் பின்பற்றியே நடத்தப்பட வேண்டும். பின்வாசல் வழியாக அரசுப் பணியில் சேருபவர்களின் பணி நியமனங்களை, எந்தச் சூழலிலும் பணிவரன்முறைப்படுத்தக் கூடாது. அவர்களை வந்த வாசல் வழியாகவே திருப்பி அனுப்ப வேண்டும்.

அதேநேரம், மனுதாரர்களை தொடர்ந்து பணியில் வைத்திருக்க பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களுக்கு எந்த தடையும் இல்லை” என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version