மதுரைக்கு குடிநீர் வழங்கும் ரூ.1685.76 கோடி மதிப்பிலான பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக முடிக்கப்பட்டு மக்களுக்கு குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மதுரை மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு 371 எம்எல்டி குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது வைகை அணை மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டங்களில் இருந்து 192 எம்எல்டி குடிநீர் மட்டுமே பெறப்படுகிறது. மதுரை மாநகராட்சி 72 வார்டில் இருந்து 100 வார்டாக மாறியதோடு 20 லட்சம் மக்கள் வசிப்பதால் இந்த குடிநீர் போதுமானதாக இல்லை. அதனால், மதுரை மாநகராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையைப் போக்க அம்ரூத்3 திட்டத்தின் கீழ் ரூ.1,685.76 கோடியில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேரடியாக மதுரைக்கு குடிநீர் கொண்டு வரப்படும் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 5 பகுதிகளாக இந்த குடிநீர் திட்டப்பணிகள் நடக்கின்றன.
முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் தடுப்பணை அமைத்து, அணையில் இருந்து அந்த தடுப்பணையில் தண்ணீரை சேமித்து, அதனை அங்கிருந்து பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வந்து மக்கள் குடிக்க உகந்த குடிநீராக சுத்திகரித்து பின் மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக லோயர் கேம்ப் பகுதியில் இருந்து பண்ணைப்பட்டி வரை 96 கி.மீ., நீளத்திற்கு சுத்திகரிக்கப்படாத குடிநீருக்கான பிரதானக் குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. பண்ணைப்பட்டியில் இந்த தண்ணீரை சுத்திகரிக்க 125 எம்.எல்.டி. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பண்ணைப்பட்டியிலிருந்து மதுரை மாநகர் வரை 54 கி.மீ. நீளத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான பிரதான குழாய் பதிக்கப்படுகிறது. இந்த தண்ணீரை, மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் சேமித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக 38 பிரமாண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் மாநகராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்த குடிநீர் திட்டம் தொடங்கும்போது, 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில் திட்டத்தை முடித்து, மதுரை மக்களுக்கு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் ‘கரோனா’ தொற்று நோய் பரவல், வடமாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திரும்பி வருவதில் தாமதம், டெண்டர் விடுவதில் நடந்த குளறுபடிகள், அடிக்கடி மாநகராட்சி ஆணையாளர்கள் மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தாமதமானது. தற்போது வரை 60 சதவீதம் வரையே பணிகள் நிறைவுப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேயர் பேட்டி: இதுகுறித்து மேயர் இந்திராணியிடம் கேட்டபோது, ”மொத்தமுள்ள 5 பேக்பேஜ்(பகுதி) பணிகளில் 2 பேக்கேஜ் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. பெரியாறு அணைப்பகுதியில் இருந்து மதுரை வரை, நகருக்கு வெளியே இந்த திட்டத்திற்கான குழாய் பதிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. விரைவில் இந்த குழாய்களில் குடிநீரை விட்டு வெள்ளோட்டம் பார்க்கும் பணிகள் நடக்கும். அதில் உள்ள குடிநீர் கசிவு உள்ளிட்ட பிரச்சனைகள் சரி செய்து பணிகள் முடிக்கப்படும். நகர்பகுதியில் மும்முரமாக இந்த திட்டத்திற்கான குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடக்கிறது. மொத்தத்திற்கு இந்த பணிகளை வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன் முடித்து மதுரை மக்களுக்கு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக அதுவரை காத்திருக்காமல் தற்போது வரும் டிசம்பர் மாதத்திற்கு பணியை முடித்து அதே மாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைத்து வந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மதுரை மக்களுக்கு குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயித்து பணி செய்து வருகிறோம்” என்றார்.