தேர்வு அறையின் வாசல் வரை காலணி அணிந்து வர தடை கிடையாது என்பதை தெளிப்படுத்தி, பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை மகாத்மா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் +2 தேர்வு எழுதி முடித்து விட்டு, தகிக்கும் தார்சாலையில், காலணி அணியாமல் மாணவ, மாணவியர் துடித்துக் கொண்டு வந்த காட்சி காண்போர் அனைவரையும் கவலைகொள்ளச் செய்தது. பள்ளி நிர்வாகத்தின் புரிதலின்மையே இதற்குக் காரணம்!
முறைகேடுகளை தடுக்க தேர்வு அறைக்குள் காலணிகள் அணிந்து வரக்கூடாது என்பதுதான் அரசின் கட்டுப்பாடு. ஆனால், சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் தேர்வு மையத்திற்கு அடுத்த தெருவில் வாகனங்களை நிறுத்தி விட்டு, வெறும் காலுடன் மாணவர்களை தேர்வு மையத்திற்கு அனுப்பியதன் விளைவே இது!
மதுரையில் இன்று 40 டிகிரி செல்சியஸ் வெயில். கொதிக்கும் வெயிலில் நடந்தால் கால் பாதங்களில் கொப்பளங்கள் ஏற்படும். ஆணியோ, முள்ளோ குத்தி பாதிப்பு ஏற்பட்டால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படலாம். பள்ளி நிர்வாகங்கள் விதிகளை சரியாக புரிந்து செயல்படுத்த வேண்டும்!
தேர்வு அறையின் வாசல் வரை காலணி அணிந்து வர தடை கிடையாது. இதை தெளிவாக விளக்கி மாணவர்களை காலணி அணிந்து சாலைகளில் செல்வதை உறுதி செய்யும் படி பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்த வேண்டும்! @CMOTamilnadu @Anbil_Mahesh.” என்று அன்புமணி கூறியுள்ளார்.