சேலம் பெரியார் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில், 2013-ம் ஆண்டு விதிமுறைகளை மீறி, மருத்துவக் கல்வி வழங்கியது, வெளிமாநிலங்களில் தகுதியற்ற மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கியது உள்ளிட்ட புகார்கள் எழுந்தன.
இதையடுத்து வெளிமாநில படிப்பு மையங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு தடை விதித்ததுடன், முறைகேடு தொடர்பாகவும் விசாரிக்க அறிவுறுத்தியது. முறைகேடு தொடர்பாக, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், தொலைநிலைக் கல்வி இயக்கக அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது உதவிப் பதிவாளராக இருந்த ராமன், தொகுப்பூதிய பணியாளர் அன்பரசி உள்ளிட்ட சிலர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைத்தது. அதன்படி, ஓய்வுபெற்ற துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முறைகேடுகள் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கை மீதான நடவடிக்கை தொடர்பாக, பெரியார் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
துணைப் பதிவாளராக பணியில் இருந்த ராமன், பணி ஓய்வுபெற இருந்த நிலையில் கடந்த 10-ம் தேதி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவருக்கான ஓய்வூதியப் பலன்கள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், துணைப் பதிவாளர் ராமனை, பணி நீக்கம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டார். இதேபோல முறைகேடு புகாரில் சிக்கியிருந்த தொகுப்பூதிய பணியாளர் அன்பரசியையும் பணி நீக்கம் செய்து துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.