Site icon Metro People

தமிழ் வழிக் கல்வியில் மருத்துவப் படிப்பு: அரசு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் தமிழ் வழிக்கல்வியில் மருத்துவ படிப்பை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கரோனா 4-வது அலை ஜூன் மாதத்துக்கு பிறகு வரும் என கான்பூர் ஐஐடி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதை புறந்தள்ளிவிட முடியாது. தமிழகத்தில் கரோனா முற்றிலுமாக குறைந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினசரி தொற்று 100-க்கும் குறைவாக உள்ளது. உயிரிழப்பு இல்லை என்ற நிலை தொடர்ந்து வருகிறது.

ஆனால், சிங்கப்பூரில் தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரும், நமது அண்டை மாநிலமான கேரளாவில் நேற்று ஒரே நாளில் 847 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 59 பேர் உயிரிழந்துள்ளனர். ஆசிய அளவில் கரோனா பாதிப்பு பெரிய அளவில் இருந்து கொண்டிருக்கிறது. எனவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இதற்கு ஒரே தீர்வு அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டும்தான்.

தமிழ் வழியில் படிப்பு

தமிழ் வழிக்கல்விக்கு தமிழக முதல்வர் சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். எனவே, மருத்துவ படிப்பை தமிழ் வழிக்கல்வியில் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும். உக்ரைனில் இருந்து திரும்பி வந்துள்ள மாணவர்களின் எதிர்கால கல்விக்கு மத்திய அரசோடு இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இந்தியாவிலேயே மருத்துவக் கல்வியை தொடர வேண்டும் என்பதே பெரும்பாலான மாணவர்களின் விருப்பமாக உள்ளது. உக்ரைனில் இருப்பதுபோல் தான் போலந்து போன்ற நாடுகளில் பாடத்திட்டம் உள்ளது. தங்களை அங்கே அனுப்பி படிக்க வையுங்கள் என சில மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, இந்த விஷயத்தில் முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசுதான். அவர்கள் முடிவு செய்ததும், மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என முதல்வர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பின்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உடனிருந்தார்.

Exit mobile version