Site icon Metro People

மேகதாது அணை விவகாரம் | கருணாநிதி காலத்து நடைமுறைகள் மட்டும் போதாது: தினகரன் கருத்து

மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் உரிய அழுத்தம் கொடுத்து மேகதாது அணையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “மேகதாதுவில் அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கி கர்நாடக அரசு பணிகளைத் தொடங்கிவிட்ட பிறகு, மிகத் தாமதமாக தூக்கம் கலைந்து விழித்துள்ள திமுக அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. ஆனால், கடிதம் எழுதுவது, தீர்மானம் நிறைவேற்றுவது என்கிற கருணாநிதி காலத்து நடைமுறைகளை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழகத்தின் நலனை திமுகவின் வழக்கப்படி இம்முறையும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது.

நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்களை வைத்திருக்கிறதோடு, தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தையும் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகதாது அணையைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரைவயில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version