ஏப்.1: உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் புல்டோசர் மூலம் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவத்துக்குக் கண்டம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.
ஏப்.1: இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனை வந்தனா கட்டாரியா ஹாக்கிப் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்தார். இந்தியாவுக்காக 320 ஹாக்கிப் போட்டிகளில் பங்கேற்று 158 கோல்களை வந்தனா அடித்துள்ளார்.
ஏப்.1: உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றவர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஏப்.2: மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாயின.
ஏப்.2: கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
ஏப்.2: இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) துணை ஆளுநராகப் பொருளாதார நிபுணர் பூனம் குப்தா நியமிக்கப்பட்டார்.
ஏப்.3. மக்களவையைத் தொடர்ந்து வக்பு திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும் எதிராக 95 வாக்குகளும் கிடைத்தன.
ஏப்.3: வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
ஏப்.3: அமெரிக்காவின் பரஸ்பர வரி திட்டத்திட்டன் கீழ் இந்தியப் பொருட்களுக்கு 27% வரி விதிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். மேலும் சீனா, வங்கதேசம், வியட்நாம், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு வரி விதிக்கப்பட்டது.
ஏப்.3: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்க அனுமதி வழங்கி அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏப்.3: மயன்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,085ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.
ஏப்.3: மேற்கு வங்கத்தில் 2016இல் பணியமர்த்தப்பட்ட 25,753 ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோரின் நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஏப்.4: நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர மறுத்துவிட்ட நிலையில், இதுதொடர்பாக அடுத்தகட்டமாக சட்டப்பூர்வ நடவடிக்கை குறித்து ஆலோசிக்கும் வகையில் அனைத்து சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
ஏப்.4: 2008இல் வீட்டு வசதி வாரியத்தின் மனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிராகத் தொடரபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏப்.4: சென்னை, திருச்சி, ஈரோடு உள்பட 14 மாவட்டங்களில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி அறிவித்தார்.
ஏப்.4: அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்தது. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிக்கும் திட்டத்தின் கீழ் சீனாவுக்கு 34 சதவீத இறக்குமதி வரி விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதற்கு பதில் நடவடிக்கையை சீனா மேற்கொண்டுள்ளது.
ஏப்.4: டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனை தொடர்பான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
ஏப்.5: இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு இலங்கை நாட்டின் உயரிய விருதான ‘இலங்கை மித்ர விபூஷண்’ விருதை அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக்க வழங்கி கவுரவித்தார்.
ஏப்.5: தமிழ்நாடு 9.5 சதவீத வளர்ச்சியுடன் பொருளாதாரத்தில் புதிய உச்சத்தைப் பதிவு செய்து, நாட்டிலேயே முதல் மாநிலமாகத் திகழ்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
ஏப்.5: போதை மீட்பு மையங்கள், மறுவாழ்வு மையங்களில் நோயாளிகளுக்குச் சிகிச்சை, கையாளுதல் குறித்த வழிகாட்டுதல்களை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது.
ஏப்.5: தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
ஏப்.6: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நவீன வசதிகளுடன் ரூ.130 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஏப்.6: நாட்டிலேயே முதல் முறையாக பாப்மனில் புதிதாக அமைக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ஏப்.6: வக்பு திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து வக்பு திருத்த சட்டம் அமலுக்கு வந்தது.
ஏப்.7: பண பரிவர்த்தனை முறைகேடு, வரி ஏய்ப்பு புகாரில் அமைச்சர் கே.என். நேரு அவருடைய உறவினர் வீடுகள் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
ஏப்.7: சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.50 மத்திய அரசு உயர்த்தியது.