சொத்து வரியை கடுமையாக உயர்த்திவிட்டதாக ஆளும் கட்சி மீது மக்கள் அதிருப்திப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், வரி கட்டாதவர்களின் வீட்டு வாசலை பொக்லைனால் தோண்டுவது, குப்பைத் தொட்டியை வைப்பது, வீட்டை ஜப்தி செய்வதாக மிரட்டுவது என வரியை வசூலிக்க அதிகாரிகள் செய்யும் அதிகபட்ச கெடுபிடிகள் ஆளும் கட்சி மீதான மக்களின் அதிருப்தியை மேலும் அதிகரித்து வருகிறது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சொத்து வரி, தண்ணீர் வரி, பத்திரப்பதிவு கட்டணம், மின் கட்டணம் உள்ளிட்டவை சுமார் மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதிலும், வரிகளை எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல் ஏற்றிவிட்டு முன் தேதியிட்டு கட்ட வேண்டும் என்று உள்ளாட்சி அதிகாரிகள் கெடுபிடி செய்கிறார்கள். இந்த நிலையில், வரியை வசூலிக்க உள்ளாட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
பண்ருட்டியில் நகராட்சி அதிகாரிகள், வரி செலுத்தவில்லை என்பதற்காக கடப்பாரை சகிதம் ஒரு வீட்டு வாசலில் போய் நின்றதுடன், அந்த வீட்டின் நுழைவு வாயிலில் பொக்லைனை வைத்து பள்ளம் தோண்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். மதுரையில், சொத்து வரி கட்டாத நிறுவனத்தின் வாசலில் குப்பைத் தொட்டியை இறக்கி வைத்து மிரட்டி இருக்கிறார்கள்.
காரைக்குடி மாநகராட்சியிலும் வரி கட்டவில்லை என்பதற்காக ஓட்டல் வாசலில் குப்பைத் தொட்டியை வைத்து அராஜகம் செய்திருக்கிறார்கள். மாநகராட்சியின் இந்த நடவடிக்கையையும், வரி உயர்வையும் கண்டித்து கடந்த 28-ம் தேதி வணிகர்கள் ஒரு நாள் ஒட்டுமொத்த கடையடைப்புப் போராட்டமே நடத்தி இருக்கிறார்கள். சென்னையில் 1,800 ரூபாய் தண்ணீர் வரி கட்டவில்லை என்பதற்காக திமுக பிரமுகர் ஒருவரின் வீட்டையே ஜப்தி செய்யப் போவதாக நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.
உத்தரப்பிரதேசத்தில், தவறு செய்தவர்களின் வீடுகளை அதிகாரிகள் புல்டோசர் வைத்து இடித்தது போல் தமிழகத்தில் வரி வசூலிப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் செய்யும் இந்த தடாலடிகள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக மக்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. உயர்த்தப்பட்ட வரியை செலுத்துவதற்கு தான் மக்கள் தாமதம் செய்கிறார்கள்.
அதை உரிய முறையில் அவகாசமளித்து வசூலிக்காமல் இப்படி அதிரடி காட்டுவது நல்லதல்ல என ஆளும் கட்சியினரே ஆதங்கப்படுகிறார்கள். “ஏற்கெனவே அரசு ஊழியர்கள் அரசு மீது அதிருப்தியில் இருக்கும் நிலையில் பொதுஜனத்தையும் அதிகாரிகள் இப்படி சீண்டி வருகிறார்கள். இதனால் அரசுக்குத்தான் கெட்ட பெயர்” என்கிறார்கள் அவர்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கடிதோச்சி மெல்ல ஏறிக… என்பதுதான் திருக்குறள் சொல்லும் நீதி. அதாவது வரிவிதிப்பதும் தெரியக்கூடாது, அதை வசூலிப்பதிலும் கடுமையாக இருக்கக் கூடாது. அந்தளவுக்கு மென்மையாக இருக்க வேண்டும். அப்படித்தான் வரி விதிக்க வேண்டும், வரி வசூலிக்க வேண்டும். ஆனால், இவர்கள் செய்வது கொடுங்கோன்மையின் உச்சம். சர்வாதிகார அரசாங்கத்தில் இப்படித்தான் நடக்கும்.
சொத்து வரி, தண்ணீர் வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு இவற்றின் மூலமாக கடந்த ஓராண்டில் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் வருவாய் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனாலும் வரி வசூலில் இப்படி அராஜகமான முறையில் நடந்து கொள்கிறார்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் ஐந்தரை லட்சம் கோடியாக இருந்தது.
ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த நான்கே மாதத்தில் ஒன்பதரை லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. அந்த அளவுக்கு நிர்வாக திறமையற்ற, மக்களை சுரண்டும் அரசாக இது இருக்கிறது. தற்போது மக்களை கசக்கிப் பிழிகிற வேலையை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
வரி உயர்வுகள் மக்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு குழுவை அமைத்தார்கள். அந்த குழு என்ன பரிந்துரைத்ததோ தெரியவில்லை. ஆனால், வரி கடுமையாக உயர்ந்திருக்கிறது. வசூலிப்பு முறைகளும் அராஜகமாக இருக்கிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.
திமுக தரப்பில் தமிழன் பிரசன்னா, வழக்கறிஞர் சரவணன் ஆகியோரிடம் அதிகாரிகள் கெடுபிடி குறித்து கேட்டதற்கு, “இப்படியெல்லாமா செய்கிறார்கள்..?” என்று அதிர்ச்சியானவர்கள், “இதை அரசின் மேல்மட்டத்தில் உள்ளவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்” என்று சொன்னார்கள். வரி வசூலிப்பில் அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொள்ளும் விதத்தை இனியும் அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால் ஆளும் கட்சிக்கு மேலும் சிக்கல் தான்!