புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத குழுவின் கமாண்டர் உள்பட இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மோதலில் ராணுவ இளநிலை அதிகாரி ஒருவர் வீர மரணமடைந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டம் சத்ரு வனப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில் மாநில போலீஸாருடன் இணைந்து ராணுவ வீரர்கள் கடந்த புதன்கிழமை தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். இதில் அன்று இரவு தீவிரவாதிகளுடன் மோதல் ஏற்பட்டது. இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
இதனிடையே, பாதகமான நிலப்பரப்பு மற்றும் மோசமான வானிலை நிலவிவரும் போதிலும் அங்கு பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் இரண்டு தீவிரவாதிகள் இன்று (சனிக்கிழமை) கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தத் தீவிரவாதிகள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், கடந்த ஒரு வருடமாக செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வந்த ஒரு உயர் மட்டத்தலைவர் சைஃபுல்லாஹ் இதில் கொல்லப்பட்டதாகவும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை ராணுவத்தினர் முறியடித்துள்ளனர். இந்த மோதலில் ராணுவ இளநிலை அதிகாரி ஒருவர் வீர மரணமடைந்தார்.