சென்னை: ஆவின் விற்பனை முகவர்களின் நலன் கருதி அவர்களின் பங்களிப்புடன் “ஆவின் விற்பனை முகவர்கள் நல நிதி” உருவாக்கப்படும் என்று பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்தார். சட்டப்பேரவையில் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு பதிலளித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசி, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
> ரூபாய் 9.34 கோடி மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலின் தரத்தினை மதிப்பீடு செய்து உடனுக்குடன் ஒப்புகைச்சீட்டு வழங்கி கண்காணிக்க ஏதுவாக 1437 கிளவுட் பால் பகுப்பாய்வு கருவிகள் நிறுவப்படும்.
> ரூபாய் 6.45 கோடி மதிப்பீட்டில் பாலில் கலப்படத்தை கண்டறியும் 129 நவீன அகச்சிவப்பு பகுப்பாய்வு கருவிகள் வழங்கப்படும்.
> ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் பால் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்க 500 ஆவின் பாலகங்கள் புதியதாக தொடங்கப்படும்.
> கூட்டுறவுச் சங்கங்களில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு ரூபாய் 2000 கோடி மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புக் கடன் வழங்கப்படும்
> ரூபாய் 2.40 கோடி மதிப்பீட்டில் 14 மாவட்ட ஒன்றியங்களில் 30 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் புதுப்பிக்கப்படும்.
> ரூபாய் 1.50 கோடிமதிப்பீட்டில் தரமான பால் கொள்முதல் செய்யத் தேவையான பால் பரிசோதனை உபகரணங்கள் 165 பால் தொகுப்பு குளிர்விப்பு மையங்களுக்கு வழங்கப்படும்
> ரூபாய் 2.23 கோடி மதிப்பீட்டில் மாதவரத்தில் உள்ள மாநில மைய ஆய்வகம் கூடுதல் உபகரணங்களுடன் மேம்படுத்தப்படும்.
> ரூபாய் 2.63 கோடி மதிப்பீட்டில் 525 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் கூட்டுறவுச் கணினி மயமாக்கப்படும்.
> ரூபாய் 72 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகளுக்கான பசுந்தீவன தேவையை பூர்த்தி செய்ய பால் உற்பத்தியளர்களுக்கு தீவன விதைகள் வழங்கப்படும்.
> ரூபாய் 2.38 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம், வேலூர், மாதவரம் ஆகிய இடங்களில் உள்ள பயிற்சி நிலையங்களில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.
> ரூபாய் 1.94 கோடி செலவில் உம்பளாச்சேரி இன பசுமாடுகளின் மரபணு மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்தும் நோக்கில் தேசிய பால் பதிவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
> ரூபாய் 58 லட்சம் மதிப்பீட்டில் பால் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்கள் கணினி மயமாக்கப்படும்.
> ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகள் பராமரிப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 12000 பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும்.
> ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட அளவில் சிறந்த மூன்று கறவை மாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படும்.
> ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்குகள் நடத்தப்படும்
> ரூபாய் 2.10 கோடி மதிப்பீட்டில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க 600 குளிர்சாதன பெட்டிகள் வழங்கப்படும்.
> ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை முறை கருவூட்டல் பணியை சிறப்பாக செயல்படுத்தும் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
> ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகளில் மடிநோய் கண்டறியும் பொருட்டு 100 சிறப்பு பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும்.
> ரூபாய் 1.73 கோடி மதிப்பீட்டில் கறவை மாடுகளில் கன்று ஈனும் இடைவெளியை குறைப்பதற்காக 2000 மலடு நீக்க சிகிச்சை மற்றும் சினை பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும்.
> தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு நுண்கடன் வழங்கும் நோக்கில் “வெண் நிதி” திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
> ஆவின் விற்பனை முகவர்களின் நலன் கருதி அவர்களின் பங்களிப்புடன் “ஆவின் விற்பனை முகவர்கள் நல நிதி” உருவாக்கப்படும்.
> தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உணவு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுடன் இணைந்து புதிய வகை மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படும்.
> தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் பல்வகை சேவை மையங்களாக உருவாக்கப்படும், என்பது உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை அமைச்சர் அறிவித்தார்.