கடலூர்: கடலூர் அருகே அதிகாலையில் மர்ம கும்பல் ஒன்று லாரி டிரைவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த பிரபு (43) என்பவர் நேற்று இரவு டிப்பர் லாரியில் திண்டிவனத்தில் இருந்து கருங்கல் ஜல்லி ஏற்றிக்கொண்டு சீர்காழி நோக்கி சென்றுள்ளார். இன்று (ஏப்.2) அதிகாலை 3 மணி அளவில் கடலூர் அருகே உள்ள ஆணையம் பேட்டை தனியார் ஹோட்டலின் அருகே விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது இரண்டு பைக்குகளில் வந்த ஆறு நபர்கள், லாரி ஓட்டுநர் பிரபுவை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.3 ஆயிரம் பணம், டார்ச் லைட், செல்போனை பிடுங்கி சென்றுள்ளனர்.
இதேபோல், பெரியப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சேவை சாலையில் திண்டிவனத்தில் இருந்து எம். சாண்டை லாரியில் ஏற்றிக்கொண்டு வந்த சீர்காழியைச் சேர்ந்த ஓட்டுநர் மணிமாறன் ( 35) லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது இரண்டு பைக்குகளில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் மணிமாறனை எழுப்பி பணம், செல்போனை கேட்டுள்ளனர். தன்னிடம் பணம், செல்போன் இல்லை என்று ஓட்டுநர் மணிமாறன் கூறி உள்ளார். மர்மகும்பல் அவரை ஆபாசமாக திட்டி அடித்து கத்தியால் நெற்றியில் தாக்கிவிட்டு, அவரது இடது கையில் அடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனால் லேசான காயமடைந்த ஓட்டுநர் மணிமாறன் கடலூர் அரசு மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெற்று திரும்பி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் புது சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் லாரி டிரைவர்களிடம் அதிகாலையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் லாரி டிரைவர்களிடம் பெரும் அச்சத்தையும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.