இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக இருந்து தற்போது பார்ம் அவுட் ஆகி இருக்கும் அர்ஜுன் (சித்தார்த்). இன்னொரு பக்கம் அர்ஜுனின் சிறுவயது தோழியான குமுதாவும் (நயன்தாரா), அவரது கணவர் சரவணனும் (மாதவன்) பல வருடங்களாக குழந்தை இல்லாமல் அதற்கான சிகிச்சையில் இருக்கின்றனர். கேண்டீன் வைத்திருக்கும் சரவணன் தண்ணீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் ஆராய்ச்சிக்காக பல லட்ச ரூபாய் கடன் வாங்கி அதனை அடைக்க முடியாமல் தவித்து வருகிறார். சிக்கலான சூழலில் இருக்கும் இந்த மூவரின் வாழ்க்கையும் ஒரு புள்ளியில் இணையும்போது என்ன நடந்தது என்பதே நெட்ஃப்ளிக்ஸில் நேரடியாக வெளியான ‘டெஸ்ட்’ படத்தின் கதை.
இந்தியாவில் குறிப்பாக தமிழில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்திலும் கதையின் மையப்புள்ளி கிரிக்கெட் தான் என்றாலும் கூட இது முழுமையான ஒரு ஸ்போர்ட்ஸ் படம் அல்ல, கிரிக்கெட் பின்னணியில் நடக்கும் அரசியல், சூதாட்டம், சம்பந்தப்பட்ட மனிதர்களின் அது ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றையே பிரதானமாக கையில் எடுத்துள்ளார் இயக்குநர் சசிகாந்த். ஆனால், அதை திரைக்கதையாக பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக கொடுத்துள்ளாரா என்றால், இல்லை என்பதே பதில்.
படத்தின் ஆரம்ப காட்சிகளில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அறிமுகம் செய்யப்பட்ட விதமும், அவற்றின் பண்புகளை நமக்கு காட்டிய விதமும் சிறப்பு. படத்தில் வரும் பிரதான கதாபாத்திரங்கள் யாவுமே முழுமையாக நல்லவர்களோ, அல்லது முழுமையாக கெட்டவர்களோ அல்ல. அவரவர் அவரவர் வழியில் சுயநல நோக்கம் கொண்டிருக்கின்றனர். சித்தார்த்துக்கு கிரிக்கெட், மாதவனுக்கு தனது ஹைட்ரோ ஃப்யூயல் ப்ராஜக்ட், நயன்தாராவுக்கு குழந்தை என அந்தந்த கதாபாத்திரங்களுக்கென இருக்கும் தனிப்பட்ட நோக்கம் மிகச் சரியான முறையில் நமக்கு கடத்தப்படுகின்றன.
படத்தின் முதல் பாதியே கூட பெரியளவில் எந்தவித பாதகமும் இல்லாமலே நகர்கின்றது. மாதவன் – நயன் இடையிலான உறவு, காதல், ஊடல் ஆகியவை சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல மாதவனின் கடன் பிரச்சினை தொடர்பான காட்சிகள், சித்தார்த்துக்கும் கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையிலான பஞ்சாயத்து ஆகியவற்றை காட்டிய விதம் நேர்த்தியாக இருக்கின்றன.
ஆனால், படம் டிராமாவிலிருந்து ஒரு கட்டத்தில் த்ரில்லர் பாணிக்கு மாறுகிறது. அங்கிருந்தே படத்தின் பிரச்சினையும் தொடங்கி விடுகிறது. ஆரம்பம் முதலே சாதுவான, நல்ல மனம் கொண்ட ஒரு கதாபாத்திரம் அப்படியே நேர்மறையாக மாறுவதாக காட்டியதை ஏற்க இயலவில்லை. குறைந்தபட்சம் முதல் பாதியில் அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் காட்சிகளை வைத்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், படம் முழுக்கவே அப்படி எதையும் காட்டாமல் திடீரென ஒரு கதாபாத்திரத்தை முழு நெகட்டிவ் ஆக மாற்றுவது எப்படி சரியாகும்?
படத்தின் பெரிய ப்ளஸ் பாயின்ட் நடிகர்கள் தேர்வு. மாதவன். நயன்தாரா, சித்தார்த் மூவருமே நிறைவான நடிப்பை தந்திருக்கின்றனர். தொடக்கம் முதல் இறுதி வரை நடிப்பில் படு இயல்பு. படம் வெளியாவதற்கு முன்பு மாதவனுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மீனை தேர்வு செய்திருக்கலாம் என்று பலரும் புலம்பியதை பார்க்க முடிந்தது. ஆனால், அதற்கெல்லாம் பதிலடி தரும் வகையில் படத்தில் மாதவன் – நயன் வரும் காட்சிகளில் கெமிஸ்ட்ரி பக்காவாக பொருந்தியிருக்கிறது.
படத்தின் இசையமைப்பாளராக பாடகி சக்திஸ்ரீ கோபாலன் பணியாற்றியிருக்கிறார். பின்னணி இசையில் குறையில்லை. பாடல்கள் கவனம் ஈர்க்கவில்லை. விராஸ் சிங்கின் ஒளிப்பதிவும் தரம். கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சி உட்பட இரண்டாம் பாதியில் காட்சிகளை எடிட்டர் டி.எஸ்.சுரேஷ் கத்தரி போட்டு தூக்கியிருக்கலாம்.
சிறப்பான நடிப்பு, நல்ல தொடக்க காட்சிகள் அமைந்தும் போக போக திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்த தவறியதால் ஓரளவுக்கு மேல நம்முடைய பொறுமையை டெஸ்ட் செய்தாலும், நேரம் கிட்டுவோர் நிச்சயம் பார்க்கலாம் இந்த ‘டெஸ்ட்’ படத்தை. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.