டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது.
இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்தது. பேட்டிங் இறங்கிய மும்பை அணியின் ரோஹித் சர்மா, ரையான் ரிக்கல்டன் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ரோஹித் 18 ரன்களுடன் வெளியேறவே, ரிக்கல்டன் 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும், திலக் வர்மா 59 ரன்களும் விளாசி அணியின் நம்பிக்கையை மீட்டனர்.
கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 ரன்களுடன் நடையை கட்டினார். நமன் தீர் 38 ரன்கள், வில் ஜாக்ஸ் 1 ரன்கள் என 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்கள் எடுத்தது மும்பை.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய டெல்லி அணியில் ஓப்பனர்களாக ஜேக் பிரேசர், அபிஷேக் பொரெல் பேட்டிங் செய்தனர். இதில் ஜேக் பிரேசர் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து கிளம்பினார். அபிஷேக் நிதானமாக ஆடி 33 ரன்கள் சேர்த்தார். அடுத்து இறங்கிய கருண் நாயர் 5 சிக்ஸர்கள், 12 பவுண்டரி என 89 ரன்கள் விளாசி அசத்தினார்.
எனினும் ட்ரிஸ்டன், விப்ராஜ் நிகம் என விக்கெட்டுகள் விழவே அணியின் நம்பிக்கை தகரத் தொடங்கியது. 18வது ஓவரில் பும்ராவின் பந்துவீச்சில் அஷுதோஷ், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா என அடுத்தடுத்து ரன் அவுட் ஆகினர். இதனால் 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து டெல்லி அணி தோல்வியை தழுவியது.