புதுடெல்லி: தேசியப் பங்குச் சந்தை கோ – லொக்கேஷன் வழக்கில் தொடர்புடைய புரோக்கிங் நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் நேற்று சிபிஐ சோதனை மேற்கொண்டது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, நொய்டா, காந்திநகர், குருகிராம் உள்ளிட்ட நகரங்களில் 10 மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
கோ-லொக்கேஷன் வழக்குத் தொடர்பாக கடந்த மாதம் தேசியப் பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணா மீதும், முன்னாள் குழும செயல்பாட்டு அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்தது. இந்நிலையில் நேற்று இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள புரோக்கிங் நிறுவனங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.
பங்குச் சந்தை வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் கோ-லொக்கேஷன் வசதியை என்எஸ்இ 2010-ல் அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த வசதியை முறைகேடாக பயன்படுத்தி குறிப்பிட்ட சில பங்குச் சந்தை புரோக்கிங் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக என்எஸ்இ மீது 2015-ல் குற்றம் சாட்டப்பட்டது.
அதுதொடர்பான விசாரணையின்போது, 2013 முதல் 2016 வரையில் என்எஸ்இயின் சிஇஓ-வாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா இமயமலை யோகி ஒருவரின் ஆலோசனையின்படியே நிறுவனம் தொடர்பான அனைத்து நிர்வாக முடிவுகளையும் எடுத்து வந்திருக்கிறார் என்பது தெரியவந்தது. அந்த யோகியின் அறிவுறுத்தலின்படியே, பங்குச் சந்தை நிர்வாகம் தொடர்பாக முன்னனுபவம் இல்லாத ஆனந்த் சுப்ரமணியனை அதிக ஊதியத்துக்கு சித்ரா ராமகிருஷ்ணா பணிக்கு அமர்த்தினார். இந்நிலையில் கடந்த பிப்ரவரியில் ஆனந்த் சுப்ரமணியனையும், மார்ச் முதல் வாரத்தில் சித்ரா ராமகிருஷ்ணாவையும் சிபிஐ கைது செய்தது.