Site icon Metro People

நீட் தேர்வுக்கான தேர்வு மையம்: என்டிஏ புதிய அறிவிப்பு

நீட் தேர்வை எழுதவுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு மையம் குறித்து அறிந்துகொள்ளலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கரோனா பரவலால் இந்த ஆண்டு நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, செப்டம்பர் 12-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

நாடு முழுவதும் 202 தேர்வு மையங்களில் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை பேனா, காகித முறையில் தேர்வு நடைபெறுகிறது.

இந்நிலையில் விண்ணப்பதாரர்கள், தங்களின் தேர்வு மையம் குறித்த விவரங்களைக் காணலாம் அல்லது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.

அதேபோல விண்ணப்பதாரர்கள், தேர்வில் ஓஎம்ஆர் தாளை எப்படி நிரப்ப வேண்டும் என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைக் காண: https://nta.ac.in/Download/Notice/Notice_20210820232640.pdf

தேர்வு மையத்தைக் காண்பதில் சிக்கல் உள்ள விண்ணப்பதாரர்கள் 011-40759000 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் அல்லது neet@nta.ac.in என்ற முகவரிக்கு இ-மெயில் செய்யலாம் என்றும் தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

Exit mobile version