Site icon Metro People

ஆன்லைன் ரம்மி தடைக்கு புதிய சட்டம்: கே.சந்துரு குழு 2 வாரங்களில் பரிந்துரைகளை அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம் தொடர்பான பரிந்துரைகளை அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. எனவே, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று பல அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம் தொடர்பான பரிந்துரைகளை அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. முந்தைய ஆட்சியாளர்களால் கடந்த 25-2-2021 அன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சில நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, கடந்த 3-8-2021 அன்று வழங்கிய தீர்ப்பில், இச்சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அதனை ரத்து செய்தது.

மேலும், இச்சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோது, அச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவியல்பூர்வமான தரவுகளை விளக்கத் தவறியதாகவும் கருத்து தெரிவித்திருந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 13-11-2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களும் அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு, தலைமையில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

மேற்குறிப்பிட்ட குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இச்சமூகப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி, அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும். இதன் மூலம் இச்சட்டம் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டிடும் வகையில் முன்மாதிரிச் சட்டமாக அமையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version