Site icon Metro People

புதிதாக ஆசிரியர்கள் நியமனம்? – அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

மாணவர் சேர்க்கைக்கு தகுந்தார் போல் ஆசிரியர்கள் கூடுதலாக நியமனம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நூலகர் தின விழா சிங்காரத்தோப்பில் உள்ள மைய நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தற்போது வரை செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். முக கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது,
குழந்தைகளை எப்படி இடைவேளை விட்டு அமர வைக்க வேண்டும் போன்ற முன் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். பொது சுகாதார துறையிடமும் ஆலோசனைகள் கேட்டுள்ளோம், அவர்கள் கூடுதலாக ஆலோசனைகள் வழங்கினார்கள் என்றால் அதையும் நாங்கள் கடைப்பிடிக்க உள்ளோம்.” என்று கூறியுள்ளார். மேலும்,

“9,10,11,12 மாணவர்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம். ஆசிரியர்கள் எவ்வளவு பேர் தடுப்பூசிகள் செலுத்தி உள்ளனர் என்ற விபரங்களை பெற்று வருகிறோம். அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தகுந்தார் போல் ஆசிரியர்கள் கூடுதலாக நியமனம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,

“தமிழ்நாட்டில் 37,579க்கும் அதிகமாக அரசு பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் கணிசமாக மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதற்கேற்றாற்போல் பள்ளி கட்டமைப்பு மற்றும் ஆசியர் தேவை குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இது குறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் விவரங்கள் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் கூறியுள்ளார்.

Exit mobile version