என் பெயர் நளினி. நான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளேன். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டாரம், சிறுவல்லிக்குப்பம் ஊராட்சியில் வசித்துவருகிறேன். எனக்குத் திருமணம் ஆகி ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். என் கணவர் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்திவருகிறேன். எங்களின் குடும்பத்தின் கூடுதல் வருமானத்திற்காகத் தொழில் தொடங்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலமாக எங்கள் கிராமத்தின் தொழில்சார் சமூக வல்லுநர் சங்கீதா, தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்குத் தொழில் தொடங்குவதற்குப் பயிற்சியுடன் கூடிய உதவி இருப்பதாகக் கூறினார். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சமுதாயத் திறன் பள்ளி மூலமாக 20 பேர் கொண்ட குழுவிற்கு ‘ஸ்கிரீன் பிரின்டிங்’ பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்கள்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக, பயிற்சியின் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்கள். ஸ்கிரீன் பிரின்டிங் பயிற்சிக்கு ஒரு நபர் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டு, 20 பேருக்கு 20 நாள்கள் பயிற்சி அளித்தார்கள். பயிற்சி முடிவில் தேவையான உபகரணங்களை ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள். தற்போது நான் ஸ்கிரீன் பிரின்டிங் தொழிலில் நன்கு முன்னேற்றம் கண்டு தனியாகத் தொழில் செய்துவருகிறேன்
இதன் மூலம் மாதம் ரூ.10,000 வரை எங்கள் குடும்பத்திற்குக் கூடுதலாக வருமானம் வருகிறது. திருமணம் மற்றும் பண்டிகைக் காலங்களில் கூடுதலாக வருமானம் ஈட்டுகிறேன். எனக்குத் தன்னம்பிக்கை கொடுத்து என் வாழ்வில் ஒளி ஏற்றிய வாழ்ந்து காட்டுவோம் திட்டத்துக்கு நன்றி!
நூறில் இருந்து ஆயிரத்துக்கு! – சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், கொட்டகவுண்டம்பட்டி கிராமத்தில் வளர்வளம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 2022ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 100 பெண் பங்குதாரர்களுடன் தொடங்கிய எங்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டினால் தற்போது வரை 1,035 பெண் பங்குதாரர்கள் எங்கள் நிறுவனத்தில் இணைந்துள்ளனர். நாங்கள் தரமான கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்யைத் தயாரிக்கிறோம்.
அவற்றிற்குத் தேவையான மூலப்பொருள் களைப் பங்குதாரர்களிடமிருந்தே வாங்கி, தரம் மிகுந்த எண்ணெய்யாக உருவாக்கி அவற்றை எங்கள் உறுப்பினர்களிடமே விற்றுவந்தோம். எங்களுக்குக் கிடைத்த வருமானத்தில் வணிகத்தை நடத்திவந்த நிலையில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (VKP) எங்களை அணுகி, எங்கள் எண்ணெய் வணிகத்தை மேம்படுத்தி ஆதரவளித்துவருகிறது. தொடக்க நிதி ரூ.5 லட்சம், வணிக மேம்பட்டு நிதி ரூ.10 லட்சம், வணிக விரிவாக்க நிதி ரூ.10 லட்சம், பசுமை நிதி ரூ.5 லட்சம் ஆக மொத்தம் ரூ. 30 லட்சம் கொடுத்து எங்கள் நிறுவனத்தை மேம்படுத்தியுள்ளனர். இதன் மூலம் எங்கள் நிறுவனத்தில் ரூ.1 கோடியே 13 லட்சம் வருமானம் ஈட்டி உள்ளோம்.
கொள்முதல் செய்யும் விளைபொருள்களை விற்பனை செய்ய ‘வேல் முருகன் டிரேடர்ஸ்’ நிறுவனத்தையும் எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொடுத்துள்ளனர். நாங்கள் ‘V V செக்கு எண்ணெய்’ என்கிற பெயரில் ஒரு லிட்டர் கடலை எண்ணெய் ரூ.240க்கு விற்பனை செய்கிறோம். விவசாயத்துக்குத் தேவையான விதைகள் அளிப்பதோடு இயற்கை உரம் தயாரித்தல், பயிர் சாகுபடி செய்தல் போன்ற பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களை இறக்குமதி செய்து குறைந்த விலைக்கு உற்பத்தியாளர் குழுக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் வளர்வளம் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்துக் கொடுத்த வாழ்ந்து காட்டுவோம் திட்டத்துக்கு நன்றி!