Site icon Metro People

இனி கிரிக்கெட் கிடையாது: பென் ஸ்டோக்ஸ் திடீர் அறிவிப்பால் இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சி

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் காலவரையற்ற ஓய்வு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளதையடுத்து, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய விரலில் ஏற்பட்டுள்ள காயத்திலிருந்து மீள வேண்டும், மனரீதியாக நலம்பெற வேண்டும் என்பதால், காலவரையற்ற ஓய்வு எடுத்துக்கொள்வதாக ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பெரும்பாலான மாதங்களை பென் ஸ்டோக்ஸ் குடும்பத்தைவிட்டு பிரிந்து பயோ-பபுள் சூழலில்தான் வாழ்ந்தார். இந்தியாவுடனான டெஸ்ட் தொடர், ஐபிஎல் டி20 போன்றவற்றிலும் பயோ-பபுள் சூழலில் இருந்தார். இதற்கிடையே நியூஸிலாந்தில் இருக்கும் தனது குடும்பத்தினரைச் சந்திக்க கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை, அதன்பின் ஸ்டோக்ஸின் தந்தை காலமானார்.

இந்த ஆண்டு கோடைகாலம் முழுவதும் விரல் காயத்தால் அவதிப்பட்ட ஸ்டோக்ஸ் மெதுவாகவே குணமடைந்தார். அதன்பின் இங்கிலாந்தில் துர்ஹாம் அணிக்காக உள்நாட்டு கவுண்டி அணியில் விளையாடி, மீண்டும் இங்கிலாந்து அணிக்குத் திரும்பினார்.

ஆனால், இங்கிலாந்து வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு, இங்கிலாந்து லெவன் அணிக்கு கேப்டனாக ஸ்டோக்ஸ் செயல்பட்டு அணியை வழிநடத்தினார். இந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் ஸ்டோக்ஸ் தலைமை வென்று கொடுத்தனர்.

இந்நிலையில் ஸ்டோக்ஸ் விரலில் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது, தன்னுடைய குடும்பத்துடன் சிறிது காலத்தை செலவிட விரும்புவதையடுத்து, ஸ்டோக்ஸ் காலவரையற்ற ஓய்வை அனைத்துவிதமான கிரிக்ெகட்டிலிருந்தும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இங்கிலாந்து கிரி்க்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “ பென் ஸ்டோக்ஸ் முடிவுக்கு நாங்கள் முழுமையாக ஆதரவு தருகிறோம். சிறிது காலம் கிரிக்கெட்டிலிருந்து விலகி இருப்பது அவருக்கு நலமாக இருக்கும்.

தன்னுடைய உணர்வுகளையும், நலத்தையும் வெளிப்படையாகக் கூறுவதில் ஸ்டோக்ஸ் துணிச்சலானவர்.எங்களுைடய வீரர்களின் மனரீதியான, உடல்ரீதியான நலன் மிகவும் முக்கியம். கரோனா சூழலுக்கு மத்தியில் எங்கள் வீரர்கள் போட்டிக்கும் தயாாரக வேண்டும், பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும். ஸ்டோக்ஸ் தனது தேவையான ஓய்வை எடுத்துக்கொண்டு அணிக்குத் திரும்பட்டும்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 4-ம் தேதி டிரன்ட் பிரிட்ஜில் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ்கிற்கு பதிலாக இங்கிலாந்து அணியில் கிரேக் ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.

Exit mobile version