யாரும் யார் மீதும் குறை சொல்லக் கூடாது. அனைவரும் உழைத்திருக்கிறோம். விளைந்த முடிவுகளுக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று பாகிஸ்தான் வீரர்களிடம் கேப்டன் பாபர் ஆஸம் உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார்.
ஐக்கி அரபு அமீரகத்தில் நடந்துவரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப்-2 பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் முதல் ஆட்டத்திலிருந்தே சிறப்பாக விளையாடி வருகிறது. பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங் என அனைத்திலும் அந்த அணியில் உள்ள இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வந்தனர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 176 ரன்கள் அடித்தபோதிலும் ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோல்வி அடைந்தது. டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் கருதப்பட்டது, அந்த அளவுக்கு வீரர்கள் அபாரமான ஃபார்மில் இருந்தனர். ஆனால், அரையிறுதியில் ஏற்பட்ட தோல்வியால் வீரர்கள் சோர்வடைந்தனர்.
இந்தத் தோல்விக்குப் பின் கேப்டன் பாபர் ஆஸம் ஓய்வறையில் வீரர்களிடம் பேசியதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீடியோவாக இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “பாபர் ஆஸம், சாக்லைன் முஷ்டாக், மேத்யூ ஹேடன் ஆகியோரின் பணி பாராட்டுக்குரியது. அரையிறுதியில் தோல்வி அடைந்தாலும் மூவரின் பணியும் பெருமைப்படக்கூடியது” எனத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வீரர்களிடம் கேப்டன் பாபர் ஆஸம் பேசியதாவது:
”முதலில் நான் அணி நிர்வாகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ஒவ்வொருவரும் இந்தத் தோல்வியால் வேதனையில் இருக்கிறோம். எங்கு தவறு நடந்தது, எங்கு சிறப்பாகச் செயல்பட்டோம் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். யாரும் இதைக் கூறமாட்டார்கள், இது நமக்கே தெரியும்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய இந்த ஒற்றுமை உடைந்து போய்விடக் கூடாது. தோல்விக்கு யாரும் யார் மீதும் குற்றம் சொல்லக் கூடாது. ஒரு குழுவாக நாம் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஏற்க வேண்டும். யாரையும் குற்றம் கூறக் கூடாது.
இந்தப் போட்டித் தொடரில் நமக்குக் கிடைத்த பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே பார்க்க வேண்டும். தோல்வி அடைந்துவிட்டோம். பரவாயில்லை, அது நடந்துவிட்டது. எதிர்காலத்தில் இந்தத் தவறு நடக்காமல் இருக்க நாம் தடுக்க வேண்டும். நம்முடைய இந்த ஒற்றுமை உடைந்துவிடக் கூடாது என்று அனைவரிடமும் கேட்கிறேன். ஒருநாள் இரவில் இந்த ஒற்றுமை வரவில்லை. இந்த ஒரு தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல், ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும்.
ஒரு கேப்டனாக உங்களிடம் இருந்து சிறந்த ஒத்துழைப்பு கிடைத்தது, சிறந்த சூழலாக இருந்தது, ஒரு குடும்பமாக இருந்தோம். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உழைப்பை அளித்தீர்கள், யாரும் பொறுப்பேற்காமல் இல்லை.
இதைத்தான் அனைவரிடமும் இருந்து எதிர்பார்த்தோம். இந்த முயற்சிதான் நமக்குத் தேவை, முடிவைப் பற்றிக் கவலைப்படவில்லை. தோல்வியைப் பற்றியும், சோர்வைப் பற்றியும் யாரும் சிந்திக்கத் தேவையில்லை. எதில் தவறு செய்தோம், எதை முன்னேற்ற வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவோம்.
இந்த நேரத்தில்தான் நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டும், யாரையும் சாய்க்கும் நேரமும், பழிதீர்க்கும் நேரமும் இதுவல்ல. எந்த வீரரும் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார் என்ற செய்தியை நான் கேட்கக்கூடாது. இந்தத் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்வோம், மகிழ்ச்சியாக இருப்போம். இந்த வலி நமக்கு இருக்கும், அதைக் கடந்து வர வேண்டும். வாழ்த்துகள்”.
இவ்வாறு பாபர் ஆஸம் தெரிவித்தார்.