Site icon Metro People

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக பொது இடங்களில் சிலைகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை: தமிழக அரசு

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக தமிழகத்தில் பொது இடங்களில் சிலைகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலாளர் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கோவை அவினாசி சாலை சந்திப்பில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலையின் பீடத்தை அகலப்படுத்தி, அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள், பிறப்பித்த அறிவிப்புகள் குறித்து விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, தமிழகச் தலைமைச் செயலாளர் இறையன்பு தாக்கல் செய்த பதில் மனுவில், ’உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிலைகள் அமைக்க அனுமதி கோரி அளிக்கும் விண்ணப்பங்களை பல்வேறு துறைகளின் ஆய்வுக்கு உட்படுத்தி, முதல்வரின் உத்தரவைப் பெற்று வருவாய் துறை இறுதி உத்தரவை பிறப்பிக்கும் வகையில் கடந்த 2017-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின் அடிப்படையில், வருவாய் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு நிலங்கள், நீர்நிலைகள், சாலைகள், புராதன சின்னங்கள் அமைந்துள்ள இடங்கள் ஆக்கிரமிக்கப்படாமல் சிலைகள் அமைக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிலைகள் அமைக்கப்படுவதால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமா என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை பெற வேண்டும். பட்டா நிலங்களில் அமைக்கப்படும் சிலைகளை பராமரிப்பதற்கான செலவை, சிலை அமைப்பவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டம் – ஒழுங்கு பிரச்சினை, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி, நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டே சிலைகள் அமைக்க அனுமதியளிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக தமிழகத்தில் பொது இடங்களில் சிலைகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை’ என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Exit mobile version