Site icon Metro People

வடகிழக்கு பருவமழை அக். 4-வது வாரத்தில் துவங்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 4-வது வாரத்தில் துவங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் தென்மேற்கு பருவ மழையானது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்தில் நிறைவடைகிறது. இதன்படி தற்போது தென்மேற்கு பருவ மழை நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் 477 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பான அளவை விட 45 சதவீதம் அதிகம் ஆகும்.

தமிழகம், புதுவையில் தென்மேற்கு காலத்தில் இயல்பாக 328 மி.மீ மழை பதிவாகும். குறிப்பாக, கடந்த 122 ஆண்டுகளில் தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் பெய்த மழை அளவுகளில் இதுதான் அதிகபட்சம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 4-வது வாரத்தில் துவங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தற்போதைய கணினி மாதிரி கணிப்பின் அடிப்படையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 4-வது வாரத்தில் துவங்க வாய்ப்பு உள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version