‘ரூ.500 கிடைக்காததால் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ என்று, வாக்குச்சீட்டில் வாக்காளர் எழுதிய வாசகங்கள், வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கும், முகவர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கான உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ரோஸ்மேரி கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழநத்தம், திருமலைக்கொழுந்துபுரம், கீழப்பாட்டம், பாளையஞ்செட்டிகுளம், நடுவக்குறிச்சி ஊராட்சிகளுக்கான வாக்குகள் எண்ணும் பகுதியில், ஊராட்சித் தலைவர் பதவிக்கான வாக்குச்சீட்டில் ஒரு வாக்காளர், ‘‘எனக்கு ரூ.500 கிடைக்கவில்லை, எனவே, யாருக்கும் ஓட்டுப்போட விரும்பவில்லை’’ என்று எழுதியிருந்தார். இது அங்கிருந்த வாக்கு எண்ணும் அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு நகைப்பை ஏற்படுத்தியது.
மற்றொரு வாக்காளர் ஒரு வாக்குச்சீட்டில் தனது கையெழுத்தை போட்டிருந்தார். இன்னொரு வாக்குச் சீட்டில் வாக்காளர் கைரேகை பதிவு செய்திருந்தார். இந்த வாக்குச்சீட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன.
அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை விக்கிரமசிங்கபுரம் அமலி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தபால் வாக்குப்பெட்டியின் சீல் அகற்றப்பட்டு, பூட்டைத் திறக்க சாவியை அலுவலர்கள் தேடினர். ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சாவி கொண்டுவரப்படவில்லை என்பது தெரியவந்ததும், பூட்டை சுத்தியலால் உடைத்து பெட்டியை திறந்து அதில் இருந்த வாக்குச்சீட்டுகள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டன.