Site icon Metro People

ஓர் ஆண்டு நிறைவு: இல்லம் தேடி கல்வித் திட்டம் இனிக்கிறதா மாணவர்களுக்கு..

கரோனா பெரும் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவரிடம் ஏற்பட்டிருந்த கற்றல் இடைவெளியை ஈடு செய்வதற்காக தன்னார்வலர்களை கொண்டு செயல்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாளை (அக்.27) ஓராண்டு நிறைவடைகிறது.

மாநிலத்தில் உள்ள 92 ஆயிரத்து 297 குடியிருப்புகளில் உள்ள சுமார் 34 லட்சம் மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தை கடந்தாண்டு அக். 27-ல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், முதலியார்குப்பம் கிராமத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முறையான கல்வித் தகுதியுடன் பயிற்சி பெற்ற 2 லட்சம் தன்னார்வலர்கள் மாதம் ரூ.1,000உதவித்தொகையுடன் பணியாற்றுகின்றனர். 2 லட்சமாவது இல்லம் தேடி கல்வி திட்ட மையத்தை திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சி ஊராட்சியில் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 8-ம் தேதி தொடங்கி வைத்தார்.

மாணவர்களின் குடியிருப்பு பகுதியில் உள்ள பொது இடத்தில் அல்லது தன்னார்வலர் இல்லத்தில் மாணவர்களை சேர்த்து 1:20 விகிதப்படி ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை இவர்களுக்கு கதை, ஆடல்-பாடல், நாடகம், விளையாட்டு, பொம்மலாட்டம் ஆகியன செயல்பாடுகள் மூலம் கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களை பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர். இத்திட்டம் ஓர் ஆண்டு நிறைவு செய்து இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. தன்னார்வலர்கள் பலரும் இன்றும் மெனக்கெடலுடன் மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.

ஆர்வமுடன் இப்பணிக்கு வர துடிப்பவர்களுக்கு இப்பணியை விட்டு வெளியேறியவர்களுக்கான இடத்தில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம். ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது அந்த காலக்கட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களைக் கொண்டு தொய்வின்றி கற்றல் பணியை தொடரச் செய்யலாம். பள்ளியில் நடைமுறையில் உள்ள கல்வித் திட்ட முறைக்கு ஏற்ப தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதால் மாணவர்களுக்கு பாடங்கள் வலு சேர்ப்பதாக அமைகிறது. நாட்டுக்கு முன் மாதிரியாகவும், பல்வேறு மாநிலங்களை திரும்பிப் பார்க்க வைத்த இல்லம் தேடி கல்வித் திட்டம் அடுத்து வரும் கல்வி ஆண்டில் தொடருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இத்திட்டம் சிறப்பாக செயல்பட அரசு முடிந்தவரை உதவி கரம் நீட்டினாலும், பள்ளி நிர்வாகம், பெற்றோர், மாணவர்கள் ஒத்துழைத்தால் தான் தன்னார்வலர்கள் உற்சாகமாக செயல்பட முடியும். சரியான கல்வித் தகுதி, நடுநிலையான தெரிவு, முறையான பயிற்சி, அதீத ஆர்வம் என்கின்ற வகையில் தன்னார்வலர்கள் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் காலடி எடுத்து வைத்தனர். அன்று இருந்த ஆர்வம் இன்று பரவலாக குறிப்பிட்ட சதவீத தன்னார்வலர்களிடம் குறைந்து வருவதை பார்க்க முடிகிறது.

எதற்கு இந்த திட்டம்? நாங்கள் தான் இருக்கிறோமே, என்பதை சில ஆசிரியர் சங்கங்களும், ஆசிரியர்களும் தனிப்பட்ட முறையில் முணுமுணுப்பதை கேட்க முடிகிறது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் முறையாக மையத்திற்கு செல்லாமலும், தன்னார்வலர்களுக்கு கட்டுப்படாமல், அவர்கள் விரும்பிய விதத்தில் செயல்படுவது தன்னார்வலர்களுக்கு ஆர்வக் குறைவு, பின்னடைவு, சோர்வு, மன அழுத்தத்தை தருகிறது. பல்வேறு சிறப்புகளையும், சில பின்னடைவுகளையும் கொண்டுள்ள இல்லம் தேடி கல்வித் திட்டம் அடுத்த கட்ட நகர்வையும், மதிப்பீட்டு அறிக்கையையும் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

கட்டுரையாளர்

ஆசிரியர், அரசு தொடக்கப்பள்ளி, அய்யம்பாளையம்.

திண்டுக்கல் மாவட்டம்

Exit mobile version