லக்னோ அணியில் இணைந்த வேகப்புயல் மயங்க் யாதவ் | IPL 2025

லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் இணைந்துள்ளார் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ். இது அந்த அணியின் பந்துவீச்சை பலப்படுத்தி உள்ளது.

இந்த சீசனுக்கு முன்னதாக அவருக்கு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார். இருப்பினும் சீசனின் தொடக்கத்தில் அவர் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கால் பகுதியில் ஏற்பட்ட காயம் அதை மேலும் தாமதப்படுத்தியது. இந்தச் சூழலில் தற்போது அவர் அணியில் இணைந்துள்ளார். அவரது வருகையை தெரிவிக்கும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை லக்னோ அணி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

லக்னோ அணி அடுத்து விளையாட உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் உடனான ஆட்டத்தில் மயங்க் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர், மூன்று டி20 போட்டிகளில் விளையாடி இருந்தார்.

கடந்த 2023 சீசன் முதல் லக்னோ அணியில் அங்கம் வகித்து வருகிறார் மயங்க். 22 வயதான அவர், கடந்த சீசனில் 4 ஆட்டங்களில் விளையாடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதில் 3 போட்டிகளில் 2 ஆட்ட நாயகன் விருதுகளை மயங்க் யாதவ் தட்டிச் சென்றார். அதுவும் அவர் வீசிய 12 ஓவர்களில் 30 பந்துகள் மணிக்கு சுமார் 150+ கிலோ மீட்டர் வேகம் வீசினார் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் வேகத்தால் எதிரணி பேட்ஸ்மேன்களை அவர் அச்சுறுத்த உள்ளார். ஐபிஎல் 2025 சீசனுக்காக எல்எஸ்ஜி அணியினால் ரூ.11 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார்.

ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இப்போதைக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது அந்த அணியின் முதல் இலக்கு. பூரன், மார்ஷ், மார்க்ரம், ரிஷப் பந்த், டேவிட் மில்லர், பதோனி என பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. சூழலில் திக்வேஷ் அசத்தி வருகிறார். தற்போது மயங்க் யாதவ் வேகப்பந்து வீச்சாளராக அணிக்கு வலு சேர்க்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *