குஜராத் மாநிலம் ஜாம்நகர் அருகே போர் விமான விபத்தில் பைலட் உயிரிழப்பு

குஜராத்தின் ஜாம்நகர் அருகே விமானப்படையின் ஜாக்குவார் ரக போர் விமானம் விபத்தில் சிக்கியதில் ஒரு பைலட் உயிரிழந்தார், மற்றொரு பைலட் தப்பினார்.

குஜராத்தின் ஜாம்நகரிலிருந்து விமானப்படையின் ஜாக்குவார் ரக போர் விமானம் நேற்று முன்தினம் இரவு வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது. அதில் இரண்டு பைலட்கள் சென்றனர். விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானிகள் விமானத்தை விட்டு வெளியேற முடிவு செய்தனர். ஒரு பைலட் பாதுகாப்பாக வெளியேறி பாராசூட் மூலம் தரையிறங்கினார். அவர் காயங்களுடன், குரு கோவிந்த் சிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு பைலட்டால் சரியான நேரத்தில் வெளியேற முடியவில்லை. அந்த போர் விமானம் ஜாம்நகர் அருகேயுள்ள வயலில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் மற்றொரு பைலட் உயிரிழந்தார். இந்த விபத்தில் பொதுமக்கள் யாரும் பாதிப்படையவில்லை. விபத்து குறித்து விமானப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.