1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்த இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை, கோடம்பாக்கத்தில் தனியார் உடற்பயிற்சிக் கூடத்தைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
”மாநிலம் முழுவதும் முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை அந்தக் கூட்டத்தில் நான் கலந்துகொள்ள உள்ளேன். அதன் பிறகு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று இறுதி முடிவு எடுக்கப்படும்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டப் போராட்டத்தில் திமுக வெற்றி பெறும். நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை பாஜகவைத் தவிர பிற கட்சிகள் அனைத்தும் வரவேற்றுள்ளன.
பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இந்நிலையில், அந்த வகுப்புகளில் அதிக மாணவர்கள் இருந்தால் அவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்பறைகளில் அமர வைக்கப்படுகின்றனர்.
பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்படும்போது, வகுப்பறைகளில் மாணவர்களை அமர வைப்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். எனினும் வகுப்புகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவோம். கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படும்”.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.