காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ள நடப்பு நிதியாண்டில் எல்ஐசி 2-வது முறையாக வாய்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி நேற்று முதல் (பிப். 7)வரும் மார்ச் 25-ம் தேதி வரை வாடிக்கையாளர்கள் தங்கள் பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நடப்பு நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, டெர்ம் அஷ்யூரன்ஸ் மற்றும் அதிக ஆபத்துக்கான திட்டங்கள் தவிர மற்றவற்றுக்குச் செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத் தொகையைப் பொறுத்து தாமதக் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும். மருத்துவத் தேவைகளில் எந்த சலுகையும் இல்லை. தகுதியான உடல்நலம் மற்றும் குறு காப்பீடு திட்டங்களும் தாமதக் கட்டணத்தில் சலுகை பெறத் தகுதியுடையவை.
இந்தப் புதிய சலுகை திட்டத்தின்படி ரூ.1 லட்சம் வரை பிரீமியம் செலுத்தியிருந்தால், தாமதக் கட்டணத்தில் 20 சதவீதம் அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும். ரூ.3 லட்சம் வரை பிரீமியம் செலுத்தியிருந்தால் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.2,500 தள்ளுபடி கிடைக்கும். ரூ.3 லட்சத்துக்கு மேல் பிரீமியம் செலுத்தியிருந்தால் 30 சதவீதம் அதிகபட்சமாக ரூ.3 ஆயிரம் சலுகை பெறலாம். குறு காப்பீட்டுத் திட்டங்களுக்குக் காலதாமத கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடி உண்டு.
செலுத்தப்பட்ட முதல் பிரீமியத்தின் தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் உள்ள பாலிசிகள் இந்த சிறப்புத் திட்டத்தின்கீழ் புதுப்பிக்கப்படும். பிரீமியம் செலுத்தும் காலத்தின்போது காலாவதியான நிலையில் உள்ளமற்றும் பாலிசி காலத்தை முடிக்காதபாலிசிகளும் புதுப்பிக்கத் தகுதியானவை. l