மதுரை: மாநகராட்சி பணியாளர்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் கவலையின்றி கவனம் செலுத்த உதவும் வகையில் பகல் நேரங்களில் அவர்கள் குழந்தைகளை பாதுகாப்பாக பராமரிக்க மதுரை மாநகராட்சியில் முதல் முறையாக ‘டே கேர் சென்டர்’ அமைக்க ஆணையாளர் சித்ரா நடவடிக்கை எடுத்துள்ளார்.
இன்றைய பொருளாதார தேவை மிகுந்த நவீன காலத்தில் கணவன், மனைவி இருவரும் பணிக்கு செல்வது அவசியமாகிவிட்டது. ஆனால், அவர்களுக்கு பள்ளிகளுக்கு செல்லாத சிறு குழந்தைகள் இருந்தால் இருவரும் பணிக்கு செல்வதில் சிக்கல் உள்ளது. அந்த அடிப்படையில், மதுரை மாநகராட்சி அலுவலங்களில் பணிபுரிவோர் வீடுகளிலும் கணவன், மனைவி இருவரும் பணிக்கு செல்லும்போது அவர்களுடைய சிறு குழந்தைகளை பராமரிக்க முடியாமல் மிகுந்த சிரமப்படுகிறார்கள்.
நகர்புறங்களில் தற்போது ‘டே கேர் சென்டர்’ (பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு மையங்கள்) வந்துவிட்டாலும் கூடுதல் கட்டணம் பெறப்படுவதால் அங்கு குழந்தைகளை விட முடியாமல் சிறு குழந்தைகள் வைத்துள்ள மாநகராட்சிப்பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலே பணிக்கு வந்து செல்கிறார்கள்.
அவர்களுடைய குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்கள் தங்கள் அன்றாட பணிகளில் கவலையின்றி கவனம் செலுத்தவும் மதுரை மாநகராட்சியில் முதல் முறையாக, மாநகராட்சி அலுவலங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் குழந்தைகளை பகல் நேரங்களில் பாதுகாப்பாக பராமரிப்பதற்கு ‘டே கேர் சென்டர்’ அமைக்க ஆணையாளர் சித்ரா நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “மாநகராட்சி மைய அலுவலகங்கள், மண்டல அலுவலங்கள், வார்டு அலுவலகங்கள், மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் குழந்தைகளை பாதுகாப்பாக பராமரிக்க இந்த ‘டே கேர் சென்டர்’ அமைக்கப்பட உள்ளது. இந்த மையம் மதுரை அரசு மருத்துவமனை அருகே உள்ள மாநகராட்சி இளங்கோ பள்ளியில் அமைகிறது.
பணிக்குச் செல்லும் பெற்றோர்கள் வீடுகளில் இல்லாதபோது, குழந்தைகளுடைய சரியான பராமரிப்பு மிக முக்கியமானது. வீடுகளில் பார்க்க ஆட்கள் இருந்தால் பெற்றோர் நிம்மதியாக பணிக்கு வந்து செல்வர். ஆனால், பராமரிக்க ஆட்கள் இல்லாத வீட்டில் பணியாளர்களை வைத்து குழந்தைகள் பராமரிக்கும்போது அவர்களால் முழுமையாக நிம்மதியாகவும் வேலையில் கவனம் செலுத்த முடியாது. மாநகராட்சி பணியாளர்களுக்கு இந்த குறையை போக்கவே அவர்களுக்காகவே ‘டே கேர் சென்டர்’ அமைக்கப்படுகிறது. வரும் கல்வியாண்டு முதல் இந்த சென்டரை செயல்பாட்டிற்கு கொண்டு வர ஆணையாளர் சித்ரா உத்ரவிட்டுள்ளார்.
இந்த சென்டரில் திறமையான நிபுணர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், குழந்தைகள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், பராமரிக்கவும் செய்ய உள்ளனர். கவனிப்பு மற்றும் கல்வியுடன் கூடிய சூழல், ஒரே வயதுடைய குழந்தைகளுடன் பழக வைத்தல், குழந்தைப் பருவக் கல்வியை வழங்குவது, படைப்பாற்றல், கணிதம் மற்றும் அறிவியல் போன்ற அடிப்படை திறன்களை மேம்படுத்துவது போன்ற பயிற்சிகள் இந்த டே கேர் சென்டரில் வழங்கப்பட உள்ளது.
மேலும், பணியாளர்கள் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற மனநிறைவுடன் பணிகளை மேற்கொள்ள இந்த ‘டே கேர் சென்டர்’ பாதுகாப்பான சூழலாக அமையும். இந்த ‘டே கேர் சென்டர்’, வெறும் பாதுகாப்பு, பராமரிப்பு மையமாக மட்டுமில்லாமல் மாநகராட்சி பணியாளர்களுடைய தங்கள் குழந்தைகள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், வரவிருக்கும் பள்ளி நாட்களுக்கு அக்குழந்தைகளை தயார்படுத்தவும் உதவும்.” என்றனர்.