Site icon Metro People

ஓடிடி திரை அலசல் | Marvel’s Secret Invasion: மேலோட்டமான திரைக்கதையால் வீணடிக்கப்பட்ட கதைக்களம்!

திரைப்படங்கள் தாண்டி ‘வாண்டாவிஷன்’, ‘லோகி’, ‘மூன் நைட்’ என மினி சீரிஸ்களில் கவனம் செலுத்திவந்த மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள மினி சிரீஸ் ‘சீக்ரெட் இன்வேசன்’. ‘கேப்டன் மார்வெல்’ படத்தின் இறுதியில் பூமியில் தஞ்சமடையும் ஸ்க்ரல்ஸ் எனப்படும் உருமாறும் ஏலியன்களுக்கும் நிக் ஃப்யூரிக்கும் இடையிலான நட்பு, ஸ்கரல்களில் ஒரு பிரிவு மனிதர்களுக்கு எதிராக திரும்புவது ஆகியவற்றை பேசுகிறது ‘சீக்ரெட் இன்வேஷ்ன்’ ( Secret Invasion).

தானோஸ் பாதி உலகை அழித்ததில் நிக் ஃப்யூரி காணாமல் போன அந்த 5 ஆண்டு காலக்கட்டத்தில் ஸ்க்ரல்களில் ஒரு பிரிவு புரட்சிப் படையாக மாறுகிறது. க்ராவிக் எனப்படும் ஸ்கரல் ஒருவனின் தலைமையில் அணிதிரளும் அவர்களுடைய எண்ணம் ரஷ்யாவுக்கு அமெரிக்காவுக்கும் சண்டையை ஏற்படுத்தி மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுப்பதே. அதன் மூலம் பூமியை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான சில சதிவேலைகளையும் செய்கின்றனர்.

அமெரிக்காவின் முக்கிய தலைவர்களில் சிலரை கடத்தி அவர்களைப் போல உருமாறுகின்றனர். அவெஞ்சர்களின் டிஎன்ஏக்களை சேர்த்து உருவாக்கப்பட்ட ‘தி ஹார்வெஸ்ட்’ என்ற வஸ்துவை அடைய ஸ்க்ரல் புரட்சிப் படையின் தலைவன் க்ராவிக் முயல்கிறான். ஸ்க்ரல்களின் இந்தத் திட்டத்தை முறியடித்து பூமியை நிக் ஃப்யூரி காப்பாற்றினாரா என்பதே ‘சீக்ரெட் இன்வேஷன்’ தொடரின் கதை.

வெப் தொடர்களில் மார்வெல் நிறுவனம் கால்பதித்த பிறகு, ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் சாத்தியமாகாத பல அம்சங்கள் வெப் தொடர்களில் முயற்சிக்கப்பட்டன. உதாரணமாக ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்தின் இறுதியில் கேப்டன் அமெரிக்கா பொறுப்பு கைமாற்றப்பட்டதன் தொடர்ச்சியிலிருந்து ‘ஃபால்கான் அண்ட் தி வின்டர் சோல்ஜர்’ கதையை கொண்டு சென்றது, வாண்டாவிஷன் + ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ கதாபாத்திரங்களை முடிச்சு போட்டது என பல்வேறு பரிசோதனை முயற்சிகளை சிறப்பாக மார்வெல் நிறுவனம் மேற்கொண்டது. ஆனால், அது ’சீக்ரெட் இன்வேஷனில்’ கோட்டை விடப்பட்டுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். ஆழமாகவும், நுணுக்கமாகவும் சொல்லியிருக்க வேண்டிய ஒரு நல்ல கதைக்களத்தை மினி சீரிஸ் என்பதற்காக அவசரகதியில் மிகவும் மேலோட்டமாக அணுகிய விதம் ஏமாற்றமளிக்கிறது.

 

முதல் எபிசோடின் ஆரம்பத்தில் பரபரப்புடன் தொடங்கும் தொடர், அதன் பிறகு தொய்வடைந்து விடுகிறது. ஏகப்பட்ட கதாபாத்திரங்களை முதலில் மனதில் பதிய வைப்பதற்கே சிரமப்பட வேண்டியிருக்கிறது. காட்சியமைப்பிலும் நினைவில் வைத்துக் கொள்ளும்படியான புதுமைகள் எதுவும் இல்லை.

மார்வெல் படங்களின் பலமே அதன் வலிமையான வில்லன்கள்தான். லோகி, தானோஸ் என ஒவ்வொரு வில்லனுக்கு ஒரு வலுவான அறிமுகமும், ஆழமான காட்சியமைப்புகளும் அந்த கதாபாத்திரங்கள் நம் மனதில் பதிய காரணமாய் இருந்தன. இதிலும் வில்லன் வலுவானராகத்தான் காட்டப்படுகிறார். ஆனால் அந்தக் கதாபாத்திரத்தில் ஆளுமையை பார்வையாளர்களின் மனதில் பதிய வைக்கும்படியான ஒரு காட்சி கூட தொடரில் இல்லாதது சோகம். மற்ற கதாபாத்திரங்களின் வடிவமைப்புக்கும் இதேதான் பிரச்சினை.

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் முக்கிய அங்கமாக இருக்கப் போகும் ஜியா(G’iah) கதாபாத்திரத்துக்கான பின்னணியும் மேலோட்டமாக அலசப்படுகிறது. இதனாலேயே தொடர் முழுவதிலும் அந்தக் கதாபாத்திரத்தோடு ஒன்றமுடியவில்லை. இதே சிக்கல் இதற்கு முன்பு வெளியான ‘மிஸ் மார்வெல்’ தொடரிலும் இருந்தது.

நிக் ஃப்யூரியாக சாமுவேல் ஜாக்சன். இந்த தொடரே இவருக்காகத்தான் என்பதால் ஒவ்வொரு காட்சியிலும் தனது ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்துகிறார். ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ டெனேரியஸ் ஆக கவனம் ஈர்த்த எமிலியா கிளார்க் சிறப்பான தேர்வு. ஜியாவாக இனி மார்வெல் படங்களில் முக்கிய அங்கமாக இவரை பார்க்கலாம். வில்லன் க்ராவிக் ஆக வரும் கிங்ஸ்லி பென் ஆதிர், ஒலிவியா கோல்மேன், பென் மெண்டெல்சன் என அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.

நிக் ஃப்யூரிக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான காட்சிகள் ரசிக்கும்படி உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்ட விதம் சிறப்பு, அதேபோல அவெஞ்சர்களின் டிஎன்ஏவை செலுத்திக் கொண்டு இறுதி எபிசோடில் நடக்கும் சண்டையும் அதற்கு முன்பாக நடக்கும் ஆள்மாறாட்டமும் கூஸ்பம்ப் ரகம். எனினும் க்ளைமாக்ஸ் சண்டையை இன்னும் சில நிமிடங்கள் நீடித்திருக்கலாம்.

இதுவரை வந்த மார்வெல் மினி தொடர்களிலேயே மிகவும் ஆழமான மற்றும் நுணுக்கமான திரைக்கதை கொண்ட தொடராக வந்திருக்க வேண்டிய ‘சீக்ரெட் இன்வேஷன்’ தொய்வான காட்சியமைப்புகளாலும், மேலோட்டமான கதாபாத்திர வடிவமைப்புகளாலும் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.

Exit mobile version