Site icon Metro People

ஓடிடி நிகழ்ச்சி: ஒப்புக்கொள்வாரா வடிவேலு?

ஓடிடியில் ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளராகப் பங்கேற்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் ஏற்பட்ட பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் முழுக்க குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார் வடிவேலு. அவருடைய ரசிகர்கள் பலரும், அவருடைய வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.

இதனிடையே, ஓடிடியில் வெப் சீரிஸ் ஒன்றில் வடிவேலு நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அதற்குப் பின் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து கரோனா நிவாரண நிதி வழங்கினார் வடிவேலு. அப்போது விரைவில் தன்னுடைய வருகை இருக்கும் என்று பத்திரிகையாளர்களிடம் சூசகமாகத் தெரிவித்தார்.

தற்போது, ஆஹா ஓடிடி நிறுவனம் தமிழில் தங்களுடைய கிளையைத் தொடங்கவுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. ஒரு பிரத்யேக அணியையும் இதற்காக உருவாக்கியுள்ளனர். தெலுங்கைப் போலவே தமிழிலும் பல்வேறு இணைய நிகழ்ச்சிகளைத் தொடங்கப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளனர்.

இதில் ஒரு காமெடி நிகழ்ச்சியும் அடங்கும். இதனை வடிவேலு தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவருக்கு நிகழ்ச்சியின் ஐடியா பிடித்திருப்பதாகவும், விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்தத் தகவல் வடிவேலு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. மேலும், சில படங்களிலும் வடிவேலுவை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

Exit mobile version