Site icon Metro People

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை இனிமேலும் நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை: கனிமொழி

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை இனிமேலும் நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. இன்று (ஜூலை 31) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“ஸ்டெர்லைட் ஆலை நிச்சயமாகத் திறக்கப்படாது எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வாக்குறுதி தந்துள்ளார். சென்ற ஆட்சிக் காலத்தில் கரோனா நோய்ப் பரவலின்போது, ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்த ஓரே காரணத்தால், அந்த ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் மட்டும் திறக்கப்பட்டு, அங்கு உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டது.

ஆனால், அவர்கள் கூறிய அளவுக்கு ஆக்சிஜன் தர முடியாவிட்டாலும், தூத்துக்குடி, திருநெல்வேலியில் உள்ள மக்களுக்குப் பயன்படக்கூடிய அளவுக்கு அங்கே ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஆக்சிஜன் தேவையில்லை என்பதைத் தெளிவாகத் தமிழக அரசு தன் வாதத்தின் வழியாக உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைத்துள்ளது. அதனால் ஆக்சிஜன் உற்பத்தியை இனிமேலும் நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை.

இப்போதைக்குத் தேவையில்லை என்பதால், ஆலையை மூடிவிடலாம். 3-வது அலை ஏற்பட்டு ஆக்சிஜன் தேவையிருந்தால் பார்த்துக்கொள்ளலாம். மேலும், தமிழக மக்களின் தேவைக்கு ஏற்ப ஆங்காங்கே ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் இருந்தும் ஆக்சிஜன் வாங்கக்கூடிய நிலை உள்ளது. அப்படிப்பட்ட மோசமான நிலை மறுபடியும் வராது.

ஏனென்றால், கேரள மாநிலத்தில் 3-வது அலைக்கான அறிகுறிகள் தெரியும்போதே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்போதே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டார்.

ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தைக் குளிர்விக்கும் கருவியின் செயல்பாட்டை ஒரே நாளில் நிறுத்திவிட முடியாது. அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நிறுத்த வேண்டும். மேலும், அங்கு தேக்கி வைத்துள்ள ஆக்சிஜனையும் எடுக்க வேண்டும். அதற்காகத்தான் அங்கு குறைந்தபட்ச மின்சாரம் வழங்கப்படுகிறது. கண்டிப்பாக மின்சாரம் வழங்குவது நிறுத்தப்படும்.

அதிமுக அரசு 10 ஆண்டுகளில் செய்ய முடியாததைத் தமிழக முதல்வர் கிட்டத்தட்ட 100 நாட்களுக்குள் செய்துவிட்டார். அந்தக் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் அதிமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர்”.

இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

Exit mobile version