புதுடெல்லி: இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, வரும் மே 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நார்வே செல்கிறார். வடக்கு ஐரோப்பா, ஆர்க்டிக் மற்றும் வட அட்லான்டிக் கடல் பகுதியில் உள்ள டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகியவை நார்டிக் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்நிலையில், 3-வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு வரும் மே 15 மற்றும் 16 தேதிகளில் நார்வேயின் ஆஸ்லோ நகரில் நடைபெற உள்ளது.
இதில், வர்த்தகம், புத்தாக்கம், பசுமை மாற்றம், காலநிலை மாற்றம், நீல பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரஷ்யா-உக்ரைன் போர் உட்பட சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் மே 15-ம் தேதி நார்வே செல்ல இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையொட்டி, டென்மார்க் பிரதமர் மெட்டே பிரட்ரிக்சனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா, டென்மார்க் இடையே கடந்த 2020-ம் ஆண்டில் ஏற்பட்ட பசுமை உத்தி கூட்டுறவு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். குறிப்பாக பல்வேறு துறைகளில் பசுமை கூட்டுறவு விரிவடைந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தனர். இது இந்தியாவில் டென்மார்க் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கியதாகவும் தெரிவித்தனர். மேலும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்” என கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ள நார்டிக் நாடுகளில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்க்க இந்தியா முயன்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதல் இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு கடந்த 2018-ம் ஆண்டு ஸ்வீடனில் நடைபெற்றது. அப்போது, அணுசக்தி விநியோக குழு (என்எஸ்ஜி) மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இணைய வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்துக்கு நார்டிக் நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இரண்டாவது மாநாடு டென்மார்க்கில் நடைபெற்றது. 3-வது மாநாடு நார்வேயில் நடைபெற உள்ளது.
இந்த உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டு நாடு திரும்ப உள்ள பிரதமர் மோடி, ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த குரேஷியா நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அந்த நாட்டுக்கு இந்திய பிரதமர் ஒருவர் பயணம் செய்வது இதுதான் முதல் முறை ஆகும்.