Site icon Metro People

டெல்லி காற்று மாசுக்கு பாகிஸ்தான் தொழிற்சாலைகள்தான் காரணம்: உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு வாதம்

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள்தான் காரணம் என்று உ.பி. அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அதிகரித்துவரும் காற்று மாசைக் குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

டெல்லி, என்சிஆர் பகுதியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் குறைக்க 24 மணி நேரத்துக்குள் எடுக்க வேண்டும் என்று காற்று தர மேலாண்மை அமைப்புக்கு உத்தரவிட்டிருந்தது. டெல்லி அரசும், காற்று தர மேலாண்மை அமைப்பும் எடுத்துள்ள நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிட்டபின், டெல்லி அரசு மருத்துவமனைகள் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் உத்தரப் பிரதேச அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் இன்று வாதாடினார். அப்போது அவர் கூறுகையில், “டெல்லி, என்சிஆர் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள்தான் காரணம். காற்று மாசுக்கும் உ.பி. மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்தார்.

அதற்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “நீங்கள் சொல்வதைப் பார்த்தால், பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளைத் தடை செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களா? உங்கள் குறைகளை டேஹ் ஆணையத்திடம் தெரிவியுங்கள் அவர்கள் தீர்வு வழங்குவார்கள்” எனத் தெரிவித்தார்.

Exit mobile version