Site icon Metro People

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு: முன்கூட்டியே முடிக்கப்படுவது ஏன்?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை நடந்த கூட்டத்தொடர்களை போலவே இதுவும் முன்கூட்டியே முடிக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.

இந்த ஆண்டும் நாடாளுமன்றப் பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கம் போல், ஜனவரி 31-இல் துவங்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரைக்கு மறுநாள் மத்தியப் பொது பட்ஜெட்டும் தாக்கலானது. இதன் முதல் பாகம் கடந்த பிப்ரவரி 11-இல் முடிவடைந்தது. பிறகு இரண்டாம் பாகம் மார்ச் 14-இல் துவங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட இதன் முடிவு தேதி ஏப்ரல் 8 ஆகும்.

ஆனால், நாடாளுமன்ற நடவடிக்கைகள், நிறைவேறவேண்டிய மசோதாக்கள் என அனைத்து பணிகளும் இரண்டு அவைகளிலும் பெருமளவில் நிறைவடைந்தன. எனவே, ஒருநாள் முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாகத் தெரிகிறது.

இதில், நாடாளுமன்றத்தின் மக்களவையுடன், மாநிலங்களவையும் என இரண்டும் இன்று ஒத்திவைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. மத்திய பொது பட்ஜெட்டிற்கான நிதி ஒதுக்கீடு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு விட்டன. இதேபோல், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மசோதாக்களும் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றுப்பட்டுள்ளன.

மேலும், சில முக்கிய சட்டத்திருத்த மசோதாக்களும் இரு அவைகளிலும் நிறைவேறி உள்ளன. இதில், குற்றவியல் நடைமுறை, டெல்லி முனிசிபல் கார்பரேஷன் உள்ளிட்ட மசோதாக்கள் இடம்பெற்றுள்ளன. இதனால், ஒருநாள் முன்னதாக இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் ஒத்திவைக்கப்படுகிறது.

அதேசமயம், இதற்கு எதிர்கட்சிகள் இடையே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவாகரத்தை எழுப்ப வாய்ப்பளிக்கப்படவில்லை எனவும் புகார் கூறுகின்றன.

இப்பிரச்சனைக்காக, மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் கடந்த சில தினங்களாக அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2020 மற்றும் 2021 பட்ஜெட் கூட்டத்தொடர்களும் முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இதற்கு கரோனா பரவல் காரணமாக இருந்தது. அதேபோல், கடந்த வருடம் குளிர்காலக் கூட்டத்தொடரின் நாட்களும் முன்கூட்டியே குறைந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version