Site icon Metro People

திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்றவும்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற ஒரே தீர்வு திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை இயற்றுவது தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:

“ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணம், நகை ஆகியவற்றை இழந்ததுடன் பெருமளவில் கடனுக்கும் ஆளானதால், தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த பொம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுல் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது!

கடந்த 3 நாட்கள் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக 2 தற்கொலைகளும், ஒரு கொள்ளையும் நடந்திருப்பதிலிருந்தே ஆன்லைன் சூதாட்டம் என்ற அரக்கன் தமிழ்நாட்டு மக்களை எப்படி சுற்றி வளைத்திருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடியும். அந்த அரக்கனிடமிருந்து தமிழக மக்களை மீட்க வேண்டும்!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால், அடுத்த சில வாரங்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்கள், சீரழிந்த குடும்பங்கள் ஆகியவை குறித்த செய்திகளை வானிலை நிலவரம் போல தினமும் தெரிவிக்க வேண்டியிருக்கும்!

ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற ஒரே தீர்வு திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை இயற்றுவது தான். அதை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்!”

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version