Site icon Metro People

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்: சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: கரோனா பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில், தமிழகம் முழுவதும் பொது இடங்களில் முகக் கவசம்அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு முன்பு தினசரி கரோனா பாதிப்பு 21 என்ற அளவுக்கு மிகவும் குறைந்திருந்தது. இந்நிலையில், கடந்தசில நாட்களாக தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 1,400-க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தலைநகர் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள், எல்லைப் பகுதியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படாததால்தான் தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், ஏற்கெனவே சில மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தற்போது பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது போன்ற தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால்தான் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே, பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருப்பவர்கள்,கரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்களுக்கு பொது சுகாதார சட்டப்படி அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version