சென்னை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை (போக்சோ) விசாரிக்க சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு உள்பட 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை சட்டத்துறை, நீதி நிர்வாகம் , சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை மானியக் கோரி்க்கைகள் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பதலளித்துப் பேசியதாவது: தமிழகத்தில் 1,338 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு புதிதாக 73 நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு 41 நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன. எஞ்சிய நீதிமன்றங்களை தொடங்குவற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வருகின்றனர். அதன் காரணமாகத்தான் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளும் போக்சோ வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் 14 பெண் நீதிபதிகள் உள்ளனர். லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் வாயிலாக கடந்த ஆண்டு 1,687 சிறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு அவை முடித்துவைக்கப்பட்டன. இவ்வாறு அமைச்சர் ரகுபதி பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
நீதி நிர்வாகத் துறை: * திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படும்.
* திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையிலும், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரிலும் புதிதாக சார்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்படும்.
* திருவள்ளூர் மாவட்டம் ஆவடியிலும், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்திலும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் அமைக்கப்படும்.
* குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ சட்டம்) கீழ் பதிவுசெய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, திருப்பூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாமக்கல், திருவாரூர், ராமநாதபுரம், நீலகிரி ஆகிய 14 மாவட்டங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றம் வீதம் 14 சிறப்பு நீதிமன்றங்கள் 3 கட்டங்களாக அமைக்கப்படும்.
* திருச்சியில் மாவட்ட நீதிபதி தலைமையில் ஒரு கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் தேவையான பணியிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஏற்படுத்தப்படும்.
சிறைத்துறை: சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின் கட்டிடங்களுக்கான ஆண்டு பராமரிப்பு நிதி ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கூடுதல் வசதிகளுடன் மாவட்ட சிறைச்சாலை வளாகம் கட்டப்படும்.
சட்டத் துறை: அரசு சட்டக் கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்கள் கற்பித்தல் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் அவர்களுக்கு பணி மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.
* அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சட்ட பாடப்புத்தகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.
* அரசு சட்டக்கல்லூரிகளில் ரூ.1 கோடி செலவில் தலா ஒரு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை அமைக்கப்படும். மேலும், ரூ.1 கோடி மதிப்பீட்டில் மின்-* நூலகம் நிறுவப்படும்.
* அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் பயனபெறும் வண்ணம் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு சட்டப் பல்கலைக்கழகங்களுடன் மாணவர் பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
* திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்துக்கு இந்த ஆண்டு ரூ.2.5 கோடியும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 கோடியும் நிதி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.