காயம் காரணமாக குர்ஜப்னீத் சிங் விலகல்: டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த அணியில் இடம் பெற்றிருந்த மிதவேகப்பந்து வீச்சாளரான குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார்.

இதனால் அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்துள்ளது சிஎஸ்கே. கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் டெவால்ட் பிரெவிஸின் அடிப்படை தொகை ரூ.75 லட்சமாக இருந்தது. ஆனால் எந்த அணியும் அவரை ஏலம் எடுக்கவில்லை. இந்நிலையில் டெவால்ட் பிரெவிஸை ரூ.2.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது சிஎஸ்கே அணி.

22 வயதை நெருங்கும் டெவால்ட் பிரெவிஸ் சர்வதேச டி 20-ல் இதுவரை 2 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி உள்ளார். ஆனால் ஐபிஎல், சிபிஎல், எம்எல்சி, எஸ்ஏ20 ஆகிய தொழில்முறை தொடர்களில் பங்கேற்று கவனம் ஈர்த்துள்ளார். இந்த ஆண்டு முடிவடைந்த எஸ்ஏ20 தொடரில் எம்ஜ கேப்டவுன் அணி சாம்பியன் பட்டம் வென்றதில் டெவால்ட் பிரெவிஸின் மட்டை வீச்சு முக்கிய பங்கு வகித்திருந்தது. அந்த தொடரில் அவர், 184.17 ஸ்டிரைக் ரேட்டுடன் 291 ரன்கள் சேர்த்திருந்தார்.

ஐபிஎல் தொடரில் அவர், இதற்கு முன்னர் 2022 மற்றும் 2024-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி இருந்தார். மொத்தம் 10 ஆட்டங்களில் விளையாடி அவர், 133.72 ஸ்டிரைக் ரேட்டுடன் 230 ரன்கள் சேர்த்திருந்தார். அதிரடி ஆட்டத்தால் அவரை ‘பேபி டி வில்லியர்ஸ்’ எனவும் அழைத்தனர். இதுவரை 81 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள டெவால்ட் பிரெவிஸ் 1,787 ரன்கள் சேர்த்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 162 ஆகும்.

இந்த சீசனில் சிஎஸ்கேவுக்கு 2-வது மாற்று வீரர் பிரெவிஸ் ஆவார், ஏற்கெனவே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியிருந்ததால் அவருக்கு பதிலாக மும்பையை சேர்ந்த் ஆயுஷ் மாத்ரேவை ஒப்பந்தம் செய்திருந்தனர். சிஎஸ்கே தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (20-ம் தேதி) வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.