2000-களின் தொடக்கத்தில் கொல்கத்தாவின் நடக்கும் சில சம்பவங்களே கதை. கொல்கத்தா நகரத்தையே கைக்குள் வைத்திருக்கும் மிகப் பெரிய தாதா பாகா என்று மக்களால் அழைக்கப்படும் பரூவா ஷங்கர் (சஸ்வதா சாட்டர்ஜி). அவருடைய வலது கரங்களாக, ஆல் இன் ஆல்-களாக செயல்படும் சாகோர் (ரித்விக் பாவ்மிக்), ரஞ்சித் (ஆதில் கான்) பாகா கண் அசைத்தால் எதையும் செய்பவர்கள். இவர்களை மேலிருந்து ஆட்டுவிக்கும் அமைச்சர் பருண் ராய் (ப்ரொசெஞ்சித் சாட்டர்ஜீ). சாகோர் மற்றும் ரஞ்சித் இருவரும் காவல் துறை துணை ஆணையரை கொன்றதும் பெரும் பிரச்சினை பாகாவுக்கு ஏற்படுகிறது.
புதிய துணை ஆணையராக வரும் ஐபிஎஸ் அர்ஜுன் மொய்த்ரா (ஜீத்) பாகாவை பிடிக்க கங்கணம் கட்டுகிறார். அமைச்சர் பருண், அர்ஜுன் மொய்த்ரா, ரஞ்சித், சாகோர், பாகா இடையிலான சதுரங்க விளையாட்டில் வென்றவர் யார் என்பதை விறுவிறுப்பு குறையாமல் சொல்கிறது ‘காக்கி: தி பெங்கால் சாப்டர்’ (Khakee: The Bengal Chapter) நெட்ஃப்ளிக்ஸ் வெப் தொடர்.
நீரஜ் பாண்டே தமிழ் ரசிகர்களுக்கும் கூட பரிச்சயமான இயக்குநர்தான். ‘எம்.எஸ்.தோனி’, ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தின் அசலான ‘ எ வெட்னஸ்டே’ ஆகிய படங்களின் இயக்குநர். வெப் தொடர்களிலும் ‘ஸ்பெஷல் ஆப்ஸ்’, ‘காக்கி: தி பிஹார் சாப்டர்’ என தனக்கென முத்திரை பதித்து வருகிறார். அந்த வரிசையில் அவரது எழுத்தில் உருவாகியுள்ளது இத்தொடர்.
தொடக்கத்தில் பாகாவின் அறிமுகம், எழுச்சி தொடங்கி அர்ஜுன் மொய்த்ராவின் வரவு என ஒரு பக்கா மாஸ் மசாலா படத்துக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் அதே நேரத்தில் நம்பகத்தன்மையுடனும் செல்கிறது தொடர். ஐபிஎஸ் அதிகாரியின் கொலையைத் தொடர்ந்து நடக்கும் அடுத்தடுத்த திருப்பங்கள் நம்மை எங்கும் நகரவிடாதபடி அடுத்தடுத்த எபிசோட்களை அமைத்திருப்பது அப்ளாஸ் ரகம்.
சில காட்சிகள் யூகிக்க முடிந்தவையாக இருப்பினும் கூட எது தேவை எது தேவையில்லை என்று தெளிவாக உணர்ந்து எழுதப்பட்ட திரைக்கதை எந்த இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தவில்லை.
காட்சிகளுடன் பார்வையாளர்கள் ஒன்றுவதற்கான முதல் காரணம் நடிகர்கள் தேர்வு. பாகாவாக வரும் சஸ்வதா சாட்டர்ஜி, பருண் ராய் ஆக நடித்திருக்கும் ப்ரொசெஞ்சித், அர்ஜுன் மொய்த்ராவாக வரும் ஜீத், ஒரு சில காட்சிகளே வந்தாலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய பரம்பிரதா சாட்டர்ஜி என அத்தனை நடிகர்களும் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளனர். ஹீரோவாக நடித்திருக்கும் ஜீத் பார்க்க 80-களின் பாலகிருஷ்ணாவை நினைவூட்டினாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
சாகோர் மற்றும் ரஞ்சித் ஆக நடித்திருப்பவர்களிடம் ஏற்படும் மனக்கசப்பு, சாகோர் மீதான ரஞ்சித்தின் கோபம் மெல்ல மெல்ல பெரும் வன்மமாக மாறும் காட்சிகள் எடுக்கப்பட்ட விதமும், அதில் அவர்களின் நடிப்பும் மெச்சத் தகுந்தவை.
குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டிய நடிப்பு அமைச்சர் பருண் ஆக வரும் ப்ரொசெஞ்சித் உடையது. மனிதர்கள் மிக அனாயசமாக கேரக்டரை உள்வாங்கி திரையில் கொண்டு வந்திருக்கிறார். முதல் எபிசோடிலிருந்தே பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்து விடுகிறது அந்த கதாபாத்திரம். காட்சிகளின் ஓட்டத்துக்கு ஏற்ற ஒளிப்பதிவும், பின்னணி இசையும், குறிப்பாக சில நொடிகள் வரும் டைட்டில் இசையும் ஈர்க்கின்றன.
எந்தவித தொய்வும் இல்லாத, அழுத்தமான த்ரில்லர் தொடரை ‘பிங்கே-வாட்ச்’ செய்ய விரும்புவோர் தாராளமாக பார்க்கலாம் ‘காக்கி: தி பெங்கால் சாப்டர்’. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழ் டப்பிங்கிலும் கிடைக்கிறது. வன்முறை காட்சிகள் அதிகம் என்பதால் குழந்தைகள் பார்க்க உகந்ததல்ல.