Site icon Metro People

பொங்கலுக்கு ‘வலிமை’ வெளியாவது உறுதி: போனி கபூர்

ஜனவரி 13-ம் தேதி அன்று திரையரங்குகளில் ‘வலிமை’ படம் வெளியாகும் என்று போனி கபூர் மீண்டும் உறுதி செய்துள்ளார்.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் பொங்கலுக்கு வெளியாகவிருந்த ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் ‘வலிமை’ படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சந்தேகம் எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வலிமை’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜனவரி 13-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று மீண்டும் உறுதி செய்துள்ளார். இதன் மூலம் ‘வலிமை’ படம் பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாவது உறுதியாகியுள்ளது.

Exit mobile version