பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு வாரிய திருத்தச் சட்டம் 2025 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாகவும் அமலுக்கு வந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் சட்டம் நிறைவேறி இருந்தாலும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் சிலர் புதிய வக்பு திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது இந்த விவகாரம் இன்னும் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாக நீடிப்பதையே காட்டுகிறது.
ஐந்து ஆண்டுகள் முஸ்லிமாக இருப்பவர்கள் மட்டுமே சொத்துகளை வக்பு வாரியத்துக்கு தானமாக வழங்க முடியும் என்ற விதி, முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினர்களாக நியமித்தல், வக்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம், சொத்துகளை 6 மாதங்களுக்குள் ஒருங்கிணைக்கப்பட்ட மத்திய தொகுப்பில் பதிவு செய்தல், வரவு-செலவு கணக்குகளை அரசு நியமிக்கும் ஆடிட்டர் மூலம் சரிபார்த்தல் போன்ற சில அம்சங்கள் எதிர்ப்புக்கான காரணங்களாக அமைந்துள்ளன.
அஜ்மீர் தர்கா தலைமை ஹாஜி சையத் சல்மான் கிஸ்தி புதிய சட்டத்தை வரவேற்றுள்ளார். வக்பு வாரிய சொத்துகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் இச்சட்டம் இருப்பதால், இச்சட்டம் இன்றைய காலகட்டத்துக்கு தேவை என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தேசிய தலைவர் மவுலானா சகாபுதீனும் ஆதரவு தெரிவித்துள்ளார். இச்சட்டம் சாதாரண முஸ்லிம்களின் கல்வி, சமூக முன்னேற்றத்துக்கு உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், வக்பு வாரிய சொத்துகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், வருமானம் குறித்த விவரங்கள் வெளிப்படையாக இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு அளிக்கப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கை, வக்பு வாரிய சொத்துகள் மூலம் ரூ.12,000 கோடி வருமானம் வர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் 8.72 லட்சம் வக்பு சொத்துகள் இருப்பதாகவும், அதிலிருந்து இன்றைய நிலவரப்படி ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வருமானம் வர வேண்டும். ஆனால், ரூ.200 கோடி மட்டுமே வருமானம் காட்டப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
பண விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாத போது இதுபோன்ற சர்ச்சைகள் வருவது இயற்கையே. புதிய சட்டம் நியாயமானதே என்று ஒருதரப்பினர் தெரிவித்தாலும், பெரும்பான்மை முஸ்லிம்கள், இச்சட்டம் முஸ்லிம் விவகாரங்களில் மத்திய அரசின் தலையீட்டையே காட்டுகிறது என்று குற்றம்சாட்டுகின்றனர்.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் வரும் ஜூன் வரை நாடு முழுவதும் தொடர் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி மற்றும் திமுக சார்பிலும் வக்பு வாரிய சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலாகி விட்டதால், தீர்ப்பு வரும்வரை பொறுமை காத்து நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.