புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வகையில் நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மசோ தாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார்.
விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதாக கூறி மத்திய அரசு கடந்த ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப் பையும் மீறி நாடாளுமன்றத்தில் இந்த சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால், இந்த புதிய வேளாண் சட்டங்கள் முழுக்க முழுக்க தங்கள் நலனுக்கு எதிராக இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். எனினும், இந்த விவகாரத்தில் விவசாயிகளின் குரலுக்கு அரசு செவிமடுக்கவில்லை.
இதன் தொடர்ச்சியாக, இச்சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்தப் போராட்டத் தில் பங்கேற்றனர். மத்திய அரசு பல முறை பேச்சு நடத்தி யும் விவசாயிகள் தங்கள் போராட் டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், இந்தப் போராட் டம் ஓராண்டை நிறைவு செய்வதற்கு சில தினங்களுக்கு முன்பு, தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தார். மேலும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வீடு திரும்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஆனால், இதனை ஏற்காத விவசாயிகள், புதிய வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் முறைப்படி திரும்பப் பெற வேண்டும் என்றனர். போராட்டத்தின் போது உயிரிழந்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிகைத் முன்வைத்தார்.
அதற்கு பதில் அளித்த மத்திய வேளாண் துறை அமைச்சர் தோமர், ‘‘உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் விவகாரம் மாநில அரசு அதிகாரத்துக்கு உட்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.
இதையடுத்து, கடந்த 29-ம் தேதிகூடிய நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே, வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதாஇரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் புதிய வேளாண் சட்டங் கள் அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன.
– பிடிஐ