உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 150 நாள்களை நெருங்கியுள்ளபோதிலும் இன்னும் ஓய்ந்தபாடு இல்லை. உக்ரைன் நாட்டின் முன்னணி நகரங்களான கீவ், கார்கீவ் உள்ளிட்டவற்றை கைப்பற்ற ரஷ்யா வான்வெளித் தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரஷ்ய படைகள் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, உக்ரைனின் சில முக்கிய பிராந்தியங்களை தன் வசமாக்கியுள்ள ரஷ்யா அங்கு வசிக்கும் மக்களுக்கு ரஷ்ய நாட்டின் குடியுரிமையை வழங்கும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. உக்ரைன் குடிமக்களை ரஷ்ய குடிமக்களாக்க விரைவு குடியுரிமை திட்டத்தை ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஆணையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கையெழுத்திட்டுள்ளார். ரஷ்ய கைவசம் உள்ள டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளில் இந்த திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது.
இப்போது புதிதாக கைப்பற்றியுள்ள ஜபோரியா, கெர்சன் போன்ற பிராந்தியத்தை சேர்ந்த மக்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. ரஷ்யாவின் இந்த அறிவிப்புக்கு உக்ரைன் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அரசின் இந்த செயல்பாடு உக்ரைனின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் விதமாக உள்ளது என உக்ரைன் வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா-ஐரோப்பிய கூட்டமைப்பான நேட்டோ நாடுகள் செயல்பட்டு வருகின்றன. அந்நாட்டுக்கு ராணுவ, நிதி உதவிகளை இந்த நாடுகள் செய்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக அந்நாட்டிற்கு ட்ரோன்களை அனுப்ப ஈரான் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் இதை உறுதிப்படுத்தியுள்ளார். ஈரானின் இந்த செயல்பாடு கண்டனத்திற்குரியது என அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.