Site icon Metro People

பிரதமர் பயண பாதுகாப்பு குளறுபடி வழக்கு: வழக்கறிஞர்களுக்கு மீண்டும் தொலைபேசியில் மிரட்டல்: எஸ்எப்ஜே அமைப்பு மீது புகார்

பிரதமர் மோடி பஞ்சாப் சென்ற போது பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக ‘லாயர்ஸ் வாய்ஸ்’ என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் உச்ச நீதிமன்றம் விசாரணைக் குழு அமைத்தது.

இந்த வழக்கு தொடர்புடைய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இங்கிலாந்தில் இருந்து தொலைபேசி மிரட்டல் வந்தது. “சீக்கிய விவசாயிகளை பிரதமர் மோடி தண்டிக்க வழக்கறிஞர்கள் உதவக் கூடாது. நீதிபதிகளும் இந்த வழக்கு விசாரணையிலிருந்து விலகியிருக்க வேண்டும்” என்று மர்ம நபர் எச்சரித்தார்.

இது தொடர்பாக, தடை செய்யப்பட்ட எஸ்எப்ஜே அமைப்பு மீது வழக்கறிஞர்கள் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் எஸ்எப்ஜே அமைப்பிடம் இருந்து தங்களுக்கு மீண்டும் தொலைபேசி மிரட்டல் வந்துள்ளதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலர் நேற்று புகார் தெரிவித்தனர். அதை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதில் பேசியுள்ள மர்ம நபர் “பிரதமர் மோடிக்கும் சீக்கியர்களுக்கும் இடையே பிரச்சினை இருந்தது. ஆனால் நீங்கள் எஸ்எப்ஜே மீது புகார் அளித்துள்ளீர்கள். இதன் மூலம் உங்களை நீங்களே ஆபத்தான நிலையில் வைத்திருக்கிறீர்கள். முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான வழக்கறிஞர்களை இதற்கு பொறுப்பாக்குவோம். ஜனவரி 26-ம் தேதி பிரதமர் மோடியை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். பிரதமர் பாதுகாப்பு குறைபாடு வழக்கை நீதிபதி இந்து மல்ஹோத்ரா விசாரிக்க அனுமதிக்க மாட்டோம்” என்று மிரட்டல் விடுத் துள்ளார்.

Exit mobile version