சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் திருக்கோயிலூர் எம்எல்ஏவாக உள்ளார். அவர் மீது அண்மையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்த பின்னர் அவருக்கு மீண்டும் வனத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் அவர் பெண்களுக்கு எதிராகப் பேசிய பேச்சும், சைவம், வைணவம் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதும் அடங்கிய வீடியோ வைரலாகி சர்ச்சையானதால் அவரது கட்சிப் பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி அவர் வகித்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பதவி நீக்கத்துக்கான காரணத்தை அந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை.
கனிமொழி ட்வீட்… – முன்னதாக திமுக எம்.பி. கனிமொழி இன்று (வெள்ளிக்கிழமை) காலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார். இது பொன்முடியின் அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய சறுக்கலாகப் பார்க்கப்படுகிறது.
அடுக்கடுக்கான சர்ச்சைப் பேச்சுக்கள்.. – ஏற்கெனவே மகளிர் விடியல் பயணத் திட்டப் பயனாளர்களை ஓசி பேருந்து பயணம், மனு கொடுக்க வந்த பெண்ணிடம் சாதியை சுட்டிக் காட்டிப் பேசியது என்று அமைச்சர் பொன்முடி பேச்சால் எழுந்த சர்ச்சைகள் திமுக அரசுக்கு நெருக்கடியாக அமைந்தன.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் பேசியதாகத் தெரிகிறது. அந்தப் பேச்சு அடங்கிய வீடியோ நேற்று முதல் சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் சூழலில் பொன்முடி திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது அமைச்சர் பதவியும் பறிபோகுமா என்ற சலசலப்புகள் கட்சிக்குள் எழுந்துள்ளன.