Site icon Metro People

தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு: ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து வகை அரசு நடுநிலைப் பள்ளிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். தொடக்கக் கல்வித்துறை தவிர பள்ளிக்கல்வித்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, கள்ளர் சீரமைப்பு மற்றும் மாநகராட்சிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், தொடக்கக் கல்வி துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று பல ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவம் கொண்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

தொடக்கக் கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் 5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 12.02.2021 அன்று தீர்ப்பு வழங்கியது.

எனவே, உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மேல்நிலைக் கல்வி சார்நிலைப் பணி சிறப்பு விதிகளில் உரிய திருத்தங்கள் செய்து தொடக்கக் கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்கி பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதனால், பள்ளிக் கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

இவ்வாறு பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்துள்ளார்.

Exit mobile version